சென்னை: ஆவடி அடுத்த முத்தா புதுபேட்டை எல்லியம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ். இவர் அதே பகுதியில் கிருஷ்ணா ஜுவல்லரி என்னும் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில்,நேற்று வழக்கம் போல் நகை கடையை திறந்துள்ளார். அப்போது நண்பகல் நேரத்தில், காரில் கடைக்கு வந்த நான்கு மர்ம நபர்கள் நகை வாங்குவது போல் பிரகாஷிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.
அதில் ஒருவர் பிரகாஷிடம் நகைகளை கொடுக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, பிரகாஷ் நகைகளை கொடுக்க மறுப்பு தெரிவித்த நிலையில், துப்பாக்கியை காட்டி பிரகாஷை மிரட்டியாதாக கூறப்படுகிறது. பின்னர், பிரகாஷை கடையில் இருக்கும் லாக்கர் அறைக்கு அழைத்து சென்று நகை, 5 லட்சம் ரூபாய் பணம், ஐபோன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தயாராக இருந்த காரில் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர், இதுகுறித்து நகை கடை உரிமையாளர் பிரகாஷ் முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், கொள்ளை சம்பவம் அரங்கேறிய நகை கடையில் ஆவடி மாநகர காவல் கூடுதல் ஆணையர் ராஜேந்திரன், துணை ஆணையர் அய்மான் ஜமால் உள்ளிட்ட அதிகாரிகள் நகைக்கடை உரிமையாளரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, கொள்ளை விவகாரம் குறித்து கண்டறிய நான்கு தனிப்படைகள் அமைத்தும், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனத்தின் எண் கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை தீவிரபடுதி உள்ளனர். நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது வட இந்தியர்கள் என நகை கடை உரிமையாளர் தெரிவித்த நிலையில் அதன் அடிப்படையில் போலீசார் வாகன சோதனைகளை தீவிர படுத்தியுள்ளனர்.இது குறித்து பேட்டி அளித்த கூடுதல் ஆணையர், தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவாக கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து உரிமையாளர் செய்தியாளர்களிடம் பேசிய போது, 4 நபர்கள் உள்ளே வந்ததாகவும் தன்னை தாக்கியும், துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்து சென்றதாக தெரிவித்தார்.காவல் நிலையம் அழைத்து சென்ற அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.