தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் புது தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் காஜாமைதீன். இவரும், இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு, ரமலான் மாதத்தில் இரவு நேரத்தில் தொழப்படும் சிறப்பு தொழுகையில் (தராவீஹ்) பங்கேற்கச் சென்றுள்ளனர். பின்னர், தொழுகையை முடித்துவிட்டு, இரவு சுமார் 10 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர்.
வீடு திரும்பிய காஜாமைதீன் மற்றும் அவரது மனை, வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த துணிமணிகள் சிதறிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகளுள் 70 கிராம் நகைகள், சார்ஜ் போட்டு வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய செல்போன் ஆகியவை திருடு போனது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து, கடையநல்லூர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற வீட்டில் கலைக்கப்பட்டு கிடந்த பீரோவை ஆய்வு செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருட்டு சம்பவம் அரங்கேறிய வீட்டிற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட, அவர்கள் மூலம் தடயங்களைச் சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கொல்லை அடிக்கப்பட்ட வீட்டிற்கு அருகில் இருக்கும் சிசிடிவி கேமராவின் காட்சிப் பதிவுகளைக் கைப்பற்றி, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, அப்பகுதியில் அதிக அளவில் மக்கள் நடமாட்டம் இருப்பதால், மற்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் யாராவது திருடினார்களா, அல்லது அதே பகுதியைச் சேர்ந்தவர் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 2018ல் 25 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தலா? என்சிபி விசாரணையில் திடுக்கிடும் தகவல்?