தருமபுரி: சேலம், தருமபுரி உட்பட 11 இடங்களில் நகைக்கடை நடத்தி வந்து ரூ.100 கோடி பணத்துடன் தலைமறைவான உரிமையாளரை தேடி வந்த நிலையில் புதுச்சேரியில் பதுங்கியிருந்தவரை தருமபுரி போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சேலம், வீராணம் வலசையூரைச் சேர்ந்தவர் சபரி சங்கர். இவர் சேலம், தருமபுரி, நாமக்கல், அம்மாபேட்டை, அரூர், ஆத்தூர், திருச்சி உட்பட 11 இடங்களில் நகை கடை நடத்தி வந்துள்ளார். இதில் மக்களை கவரும் விதமாக, தங்க நகை சேமிப்பு திட்டம், பழைய நகைகளுக்கு புதிய நகை வழங்கும் திட்டம், என பல திட்டங்களை அறிவித்துள்ளார். இதை நம்பிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் அனைத்து கடைகளையும் பூட்டிவிட்டு ரூ.100 கோடி மதிப்பிலான நகை, பணத்துடன் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நகைக்கடை உரிமையாளர் சபரி சங்கர், மேலாளர்கள் கவின், அஜித் ஆகியோர் மீது மோசடி உள்பட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனையடுத்து, அவர் மீது பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்ததால் அந்தந்த மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்ய சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கு தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்படி சேலம், தருமபுரியில் வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளர் கற்பகம், காவல் உதவி ஆய்வாளர் சிவசந்திரன், திருஞானம் தலைமையிலான ஐந்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர், தலைமறைவான சபரி சங்கரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இதற்கிடையில், சபரி சங்கர் புதுச்சேரியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் தருமபுரி இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையிலான தனிப்படை போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு வீடு வாடகைக்கு வீடு எடுத்து தனியாக பதுங்கி இருந்த சபரிசங்கரை நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவரை தருமபுரிக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மோசடி செய்த பணத்தை பதுக்கி வைத்துள்ளாரா? அல்லது நிலமாக வாங்கி குவித்துள்ளாரா என விசாரணை நடந்து வருகிறது. மேலும், தருமபுரி சீனிவாச ராவ் தெருவில் உள்ள நகைக்கடையை திறந்து ஆவணங்கள் மற்றும் வெள்ளி பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இதனை அடுத்து சபரி சங்கர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், சபரி சங்கரி நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்த பிறகு எவ்வளவு மோசடி என தெரியவரும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி ரத்து.. எப்போது அமல்? - RC Cancel Rules