ஈரோடு: விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் நாளை(சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பொதுவாகவே, சுபமுகூர்த்தம், திருவிழா போன்ற விஷேச நாட்களில் பூக்கள் மற்றும் காய்கறிகளின் விலை பல மடங்கு அதிகரிக்கும். அந்த வகையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, முல்லைப் பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, கோயில்களில் சிறப்புப் பூஜை, வழிபாடுகள் நடைபெறும். அதற்காக பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால், மல்லிகை பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விவசாயிகள் கொண்டு வந்த மல்லிகைப் பூக்களை ஏலம் எடுக்க வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவியது. இதன் காரணமாக மல்லிகை கிலோ ரூ.500க்கு விற்கப்பட்ட நிலையில், விநாயகர் சதுர்த்தி எதிரொலியாக இன்று (செப்.6) கிலோ ரூ.940 ஆகவும், முல்லை கிலோ 235-ல் இருந்து ரூ.700 ஆகவும், அரளி கிலோ ரூ.70-ல் இருந்து 160 ஆகவும், செண்டுமல்லி ரூ.14-ல் இருந்து ரூ.70 ஆகவும் அதிகரித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, கொள்முதல் செய்த பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இருந்து வேன் மூலம் கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா திருவனந்தபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பூக்கள் விலை உயர்வாலும், வியாபாரம் நல்ல விலைக்கு விற்று முடிந்ததாலும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில், சத்தியமங்கலம் பகுதியில் மட்டும் 6 டன் மல்லிகைப் பூக்கள் உற்பத்தியானது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி: ஈரோடு வார சந்தையில் இருமடங்கு விலை உயர்ந்த வாழைத்தார்!