மதுரை: மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே உள்ளது மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, சத்திரப்பட்டி, மேலூர், கொட்டாம்பட்டி, சிலைமான், நெடுங்குளம், செக்காணூரணி, உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பூக்கள் மட்டுமன்றி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் இங்கே விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
நாளொன்றுக்கு சராசரியாக 50 டன்னுக்கும் மேல் இங்கே பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மொத்தமாகவும், சில்லறையாகவும் அனைத்து வகைப் பூக்களும் இம்மலர்ச்சந்தையில் விற்பனையாகின்றன. மதுரை மல்லிகை கூடுதலான மணம் மற்றும் தன்மை காரணமாக மத்திய அரசு புவிசார் அந்தஸ்து வழங்கியுள்ளது.
மதுரை மண்ணில் உற்பத்தியாகும் மல்லிகை, வெளி மாநிலங்கள் மட்டுமன்றி, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் கூட விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நாளையும், நாளை மறுநாளும் கொண்டாடப்படுவதால், பூக்களின் விலையில் கணிசமான ஏற்றம் காணப்படுகிறது.
இதையும் படிங்க: தங்கம் வாங்க சரியான நேரம்..சென்னையில் இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை!
குறிப்பாக மதுரை மல்லிகை கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லை ரூ.700, பிச்சி ரூ.700, மெட்ராஸ் மல்லி ரூ.600, கனகாம்பரம் ரூ.800, பட்டன்ரோஸ் ரூ.300, சம்பங்கி ரூ.300, செவ்வந்தி ரூ.250, செண்டு மல்லி ரூ,130, அரளி ரூ.800, தாமரை ஒன்றுக்கு ரூ.20 என பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மதுரை மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறுகையில், “நவராத்திரி விழாவின் முக்கிய நாட்களாகக் கருதப்படும் விஜயதசமியை முன்னிட்டு பூக்களின் விலையில் கணிசமான ஏற்றம் காணப்படுகிறது. அதுமட்டுமன்றி பூக்களின் வரத்தும் சீராக உள்ள காரணத்தால், ஓரளவிற்கு கட்டுப்படியான விலை உள்ளது. அடுத்த ஒரு சில நாட்களுக்கு இதே விலை நிலவரமே நீடிக்கும்” என்றார்.