திருவாரூர்: தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்ட வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருவாரூர் அருகே விளமல் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில், ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறவிருக்கும் வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த மாநாடு, அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆயத்த மாநாட்டில், ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், “தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து, தங்களது வாழ்வாதார உரிமையை மீட்டெடுக்க உருவாக்கப்பட்ட இயக்கம்தான் ஜாக்டோ ஜியோ. இந்த பேரமைப்பின் மூலம், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் வேலைநிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாட்டினை நடத்தி வருகிறோம்.
இந்த ஆயத்த மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்பது, திமுக அரசு ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் ஆகியும், தேர்தல் வாக்குறுதியில் அரசு ஆசியர்களுக்கு சொல்லப்பட்ட எந்த ஒரு அறிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், 4வது பட்ஜெட், வருகிற பிப்.19ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டின் தேர்தல் அறிக்கையை பல மாநிலங்கள் அமலாக்கிவிட்டன. நேற்று (பிப்.09) சிக்கிம் மாநிலம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்கிவிட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு, தனது தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதி அமைச்சர் மாறி உள்ளார். அவர் பழனிவேல் தியாகராஜனைப் போல் இல்லாமல், எங்களுக்குத் தேவையான ஓய்வூதியத் திட்டம், சரண்டர் மற்றும் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த போராட்ட ஆயத்த மாநாட்டை முதலமைச்சர் கவனத்தில் கொண்டு செல்வதற்காகத்தான் நடத்தி வருகிறோம். வரும் பிப்.15ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, எங்களை அழைத்து அரசு பேச வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறோம்.
மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள், எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். எங்களை அழைத்து அரசு பேசவில்லை என்றால், வரும் பிப்.26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும். ஆனால், தமிழக முதலமைச்சர் நிச்சயமாக எங்களைப் போராட விட மாட்டார். அழைத்துப் பேசி நல்ல தீர்வை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.
முன்னதாக, கடந்த 01.04.2023-க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு, பழைய ஓய்வுத் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் எனவும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ சார்பில் வருகிற பிப்.26ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: Myv3 Ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது!