சென்னை: 18வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்.19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதிவரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச்.20 தொடங்கியது. தேர்தலை நியாயமான மற்றும் சுமுகமான முறையில் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒருபகுதியாக, மாவட்டந்தோறும் உள்ள அரசு அதிகாரிகள், போலீசார்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டு தேர்தல் பணிகள் மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனை அனைத்து மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களும் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாநகராட்சி அலுவலகம் அம்மா மாளிகையில், வருமானவரித்துறை, ஊடகச் சான்று, போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள், தேர்தல் கண்காணிப்பு குழுவினர் ஆகியேருடன் தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் நேற்று வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் பெருநகர சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, சென்னை மாநகர காவல் துணை ஆணையர், இணை ஆணையர், கூடுதல் ஆணையர், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன், தேர்தல் நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்தான விளக்கப்படங்கள் மற்றும் வீடியோ மூலம் காட்சிப்படுத்தி அதிகாரிகளுக்கு விளக்கினார்.
அப்போது மேடையில் பேசிய ராதாகிருஷ்ணன், "தேர்தல் தொடர்பான பணிகளில் அலட்சியமாக செயல்படக்கூடாது. இது நீங்கள் பணியாற்றும் முதல் தேர்தல் அல்ல; இதற்கு முன் தேர்தல்களை சந்தித்திருப்பீர்கள். எனவே, எந்த பயமும் இல்லாமல் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் அனைத்தும் சுமுகமாக நடைபெற்று வருகிறது. கூடுதல் ஆணையாளர்கள் மூலம் தேர்தல் பணிகள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், தேர்தல் பணப்பட்டுவாடா உள்ளிட்டவைகளை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "சுவையான ஆட்டு பிரியாணி கோவைக்கு ரெடி" - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேச்சு! - TRB Rajaa Vs Annamalai