சென்னை: ஐ.டி. துறையில் வேலைப்பார்க்கும் பெரும்பாலானவர்கள் வெளியூரில் இருந்து வருபவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு வாழும் இடமாக அமைவது பணம் செலுத்தும் விருந்தினர் விடுதிகள் அதாவது ஆங்கிலத்தில் பி.ஜி. விடுதிகள் (PG HOSTEL) எனப்படுவது. இந்த ஐ.டி PG விடுதிகளின் சொத்து வரியை வணிக பயன்பாடாக கருதாமல் குடியிருப்பு பயன்பாட்டாக மற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு IT விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகள் நலச்சங்கம் சார்பில் செயலாளர் வெங்கட சுப்பையா செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், “ தமிழ்நாடு அரசு சார்பில் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்த அரசிதழ்படி விடுதிகளுக்கு பயன்படுத்தப்படும் கட்டிடங்களுக்கு சொத்து வரியை குடியிருப்புக்கான வரியாக மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை தமிழகத்தில் உள்ள IT விடுதிகளுக்கு வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரியை அரசு வசூலிக்கிறது. மேலும் 2024ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்த தீர்ப்பின்படியும் இந்த IT PG விடுதிகளை குடியிருப்பு வாழ்விடமாகவும், இங்கு பயன்படுத்தும் தண்ணீர் உட்பட அனைத்தும் குடியிருப்புக்கான பயன்பாட்டாக கருத வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இவற்றை கருத்தில் கொள்ளாமல் இன்றுவரை IT PG விடுதிகளுக்கு வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரியை அரசு வசூலிக்கிறது, இவற்றை அரசு வெகுவிரைவில் கருத்தில் கொண்டு குடியிருப்புக்கான சொத்து வரியாக அளிக்க வேண்டும். ஏன்னென்றால் இந்த விடுதிகள் ஏழை, எளிய, கிராமபுறத்திலிருந்து வந்து தங்கி பணிபுரியும் மகளிர் மற்றும் ஆடவர்களுக்கான விடுதிகளாக உள்ளன. மேலும் இந்த விடுதிகள் மூலம் வாழ்வாதாரம் இழந்த மகளிர், திருநங்கையர்கள் உணவு சமைத்து கொடுத்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகின்றனர். இதன் மூலம் அவர்களின் குழந்தைகளின் கல்வி தேவைகளையும் நிறைவேற்றப்படுகிறது.
இருபாலர்களும் சேர்ந்து வசிக்கும் CO-LIVE விடுதிகளில் 200 முதல் 300 பேர் தங்கும் நிலையில், அவர்களின் விடுதிகளுக்கு குடியிருப்புக்கான சொத்து வரி விதிக்கும் தமிழக அரசு, ஏன் இதுபோன்ற 30 முதல் 40 பேர் தங்கும் விடுதிகளுக்கு குடியிருப்புக்கான சொத்து வரி அளிக்கிறது எனத் தெரியவில்லை. இதே நிலை தொடர்ந்தால் பணக்கார வீட்டு பிள்ளைகள் மட்டுமே விடுதிகளில் தங்க முடியும். மேலும் இதனால் பல சிறு, குறு விடுதிகள் அழிந்து போகும். அவ்வாறு நடந்தால் ஏழை எளிய பிள்ளைகள் பணிபுரிவதற்காக வருபவர்களின் தங்கும் சூழல் இல்லாமல் போகிவிடும். எனவே இந்த IT PG விடுதிகளை Form Dயில் இருந்து ரத்து செய்து, அரசு அறிவித்துள்ள சலுகைள் அனைத்தையும் இந்த விடுதிகளுக்கும் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்" என்று வெங்கட சுப்பையா கூறினார்.
இதையும் படிங்க: வெளிமாநில நோயாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும்" - முதல்வரிடம் அமைச்சர் மா.சு. கோரிக்கை!