சென்னை: கடந்த 5ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் 4வது சந்தில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் பூங்காவைப் பராமரித்து வரும் சோனியா என்பவரின் 5 வயது மகளான சுரக்ஷாவை பூங்காவின் எதிரில் வசிக்கும் புகழேந்தி என்பவர் வளர்த்து வரும் 2 ராட்விலர் இன நாய்கள் பூங்காவிலிருந்த குழந்தை மற்றும் அவரது தாயார் சோனியா ஆகிய இருவரையும் கடித்துக் குதறியதில் பலத்த காயம் ஏற்படுத்தியது.
இதில், பாதிக்கப்பட்டவர்களை அரசு பொது மருத்துவமனையில் குழந்தையின் தாயாருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு குழந்தை மேல் சிகிச்சைக்காக அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து, செல்லப்பிராணிகளை வளர்க்க உரிமையாளர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியிடம் இருந்து கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என்று அறிவிப்பினை வெளியிட்டது.
இதுமட்டும் அல்லாது அந்த அறிவிப்பில், "செல்லப்பிராணிகளுக்கு வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும்; முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்க வேண்டும்; பொது இடங்களுக்குக் கழுத்துப்பட்டையுடன் சங்கிலி இல்லாமல் அழைத்துச் செல்லக்கூடாது.
மேலும், வெளி நபர்களிடம் அச்சம் மூட்டும் வகையிலும், திடீரென பாயும் தன்மை கொண்ட நாயாக இருந்தால் அந்த நாய்களைக் கட்டுப்பாடின்றி மற்றும் முகமூடி (Muzzle) இல்லாமல் வெளியே கொண்டு செல்லக்கூடாது; தெருக்களிலோ, பொது இடத்திலோ ஒரே ஒரு செல்லப்பிராணியைக் குறிப்பாக ஒரே ஒரு நாயை மட்டுமே அதன் உரிமையாளர்கள் அழைத்துச் செல்ல வேண்டும்.
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளவாறு, அந்த செல்லப் பிராணியை அழைத்துச் செல்லும் பொழுது மற்றவர்களின் பாதுகாப்பைக் கருதி அதன் வாயை மூடியிருக்கச் செய்தும், கட்டாயம் கழுத்துப்பட்டையுடன் சங்கிலியால் கட்டி வைத்திருக்கவும் வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருந்தாலும், வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் மட்டுமே பூங்காக்களுக்குள் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படும்; தெரு நாய்கள் அல்லது கட்டி வைக்கப்படாத செல்லப் பிராணிகள் உள்ளே நுழைவது தடுக்கப்படும்.
பூங்காக்களில் உள்ள குழந்தைகள் விளையாடும் பகுதிக்கு வளர்ப்பு நாய்களை எடுத்துச் செல்வதும் தடை செய்யப்படும். இந்தியப் பிராணிகள் நல வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இதனை மீறி உரிமம் பெறாமல் மற்றும் தொடர்ந்து ஆபத்து ஏற்படும் வகையிலும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் பொது இடங்களில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் திறந்துவிட்டால் அந்த நாயின் உரிமையாளரின் மீது உரியச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு உரிமம் பெற ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். இதற்காகப் பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்னும் இணையதளத்திற்கு தங்களது விவரங்களை உள்ளீடு செய்து நான்கு இலக்க எண்ணை உள்ளீடு செய்து கொள்ள வேண்டும்.
அதில், செல்லப்பிராணிகளின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து உரிமையாளர் புகைப்படம், முகவரி, சான்றின் புகைப்படம், செல்லப்பிராணியின் புகைப்படம், ஒரு வருடத்திற்குள்ளாக வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றின் புகைப்படம் ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்து உறுதி மொழி அளித்த பின்னர் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விவரங்களைச் சம்பந்தப்பட்ட மண்டல கால்நடை உதவி மருத்துவர் சரிபார்த்து அங்கீகரித்த பின்னர் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்குப் பணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் பிறகு உரிமையாளர்கள் இணைய வழியில் 50 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
அதன் பிறகு செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஊட்டியில் கோலாகலமாக நடைபெற்ற 135வது நாய்கள் கண்காட்சி: 450க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு!