திருப்பூர்: உடுமலை அருகே குறுஞ்சேரி கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் செந்தில்குமார், சிந்து பாரதியின் மகன் மிதுன் மகாதேவ் என்பவரது காதணி விழா நடைபெற்றது. சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் செந்தில்குமார், காங்கேயம் நாட்டு இன மாடுகளை பாதுகாக்க வலியுறுத்தி காதணி விழாவில் 10க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் ரேக்ளா பந்தயத்தில் வெற்றி பெற்ற கோப்பைகளுடன் கண்காட்சியை அமைத்திருந்தார்.
இந்த காதணி விழா மற்றும் கண்காட்சிக்கு வந்தவர்களை வியப்படைய செய்ததோடு வெகுவாக ஈர்த்தது. இதுகுறித்து விவசாயியும், பல்வேறு ரேக்ளா போட்டிகளில் கலந்து கொண்டுள்ள விக்னேஸ் என்பவர் கூறியதாவது, "இன்றைய காலகட்டத்தில் விழாக்களில் பல விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காங்கேயம் இன நாட்டு மாடுகளை பாதுகாக்க வலியுறுத்தி நாட்டு மாடுகள் கண்காட்சி காதணி விழாவில் நடத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
கலப்பின மாடுகள் மூலம் கிடைக்கும் பாலில் சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. நாட்டு மாடுகளிலிருந்து கிடைக்கும் பாலே ஆரோக்கியமானது. எனவே மத்திய அரசு மாநில அரசுகள் காங்கேயம் இன நாட்டு மாடுகள் அழியாமல் இருக்க விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்" என தெரிவித்தார். கலப்பின மாடுகளை தவிர்த்து காங்கேயம் இன நாட்டு மாடுகளை வளர்க்க காதணி விழாவில் ஐடி ஊழியர் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதையும் படிங்க: கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம்; தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - SOUTHERN RAILWAY