சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கோட்டை கொத்தளத்தில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக்கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சுதந்திர தின விழாவின் போது பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி நபர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கப்பட்டது.
வயநாடு நிலச்சரிவின் போது துணிச்சலாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனாவுக்கு துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
அதேபோல் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது இஸ்ரோவின் சந்திரயான் -3 விண்கல திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேலுக்கு வழங்கப்பட்டது. கடந்தாண்டு நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரை வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை உலகமே பாராட்டியது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்தான் வீரமுத்துவேல் என்பதை பாராட்டும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டது.
யார் இந்த வீரமுத்துவேல்?: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வீரமுத்துவேல் ரயில்வே பள்ளியில் படித்து, பின்னர் தொழிற்கல்வி பயின்றார். அதன் பிறகு விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளோடு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்துள்ளார். பின்னர் சென்னை ஐஐடியில் முதுநிலையையும் ஆராய்ச்சி படிப்பையும் மேற்கொண்டார்.
அப்போது ஏரோ ஸ்பேஸ் துறையின் முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அவருக்கு 2004-ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் 2019 ஆம் சந்திரயான்-3 திட்டம் இயக்குநராக தேர்வு செய்யப்பட்டார்.
இவர் சந்திரயான் 2 திட்டத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளார். அதில் இருந்து கற்ற பாடத்தின் மூலம் சந்திரயான்-3-ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி நிலவின் தென் துருவத்தை உலகிற்கு காட்டிய பெருமைகளுக்கு சொந்தக்காரர் தான் இந்த வீரமுத்துவேல். அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இதையும் படிங்க: விபத்தில் தவறவிட்ட தங்க நகைகளை பத்திரமாக மீட்டு கொடுத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!