திருப்பூர்: மாவட்டம், பல்லடம் அடுத்த சேமலைகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (76). இவர் தனது தோட்டத்து வீட்டில் மனைவி அலமேலுவுடன் (65) தங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். இவர்களது மகன் செந்தில்குமார் (45) கோவையில் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவையில் வசித்து வந்தார்.
இந்நிலையில், செந்தில்குமார் தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மூன்று பேரும் தெய்வசிகாமணி வீட்டில் உறங்கி உள்ளனர். அப்போது தோட்டத்து பகுதியில் சத்தம் கேட்டதால் தெய்வசிகாமணி எழுந்து வெளியே சென்று பார்த்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் தெய்வசிகாமணியை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். அதனை தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற மர்ம நபர்கள் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த தெய்வசிகாமணி மற்றும் அலமாத்தாள் இருவரையும் வெட்டி கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று காலை சவரத் தொழிலாளி ஒருவர் வீட்டில் வந்து பார்த்தபோது மூவரும் பிணமாக கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அவினாசிபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் காவல் துறை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் போலீசார் சடலங்களை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: சென்னையில் வெளுக்கும் கனமழை; மெட்ரோ, புறநகர் ரயில், விமான போக்குவரத்து நிலவரம் என்ன?
ஒரு நபர் செய்திருக்க வாய்ப்பில்லை
பின்னர் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் லட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த சம்பவம் ஒரு நபர் செய்திருக்க வாய்ப்பில்லை. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை பிடிக்க 5 தனி படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
சாயல்குடி தம்பதியிடம் விசாரணை
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட தெய்வசிகாமணி தோட்டத்தில் தனது மனைவியுடன் வேலை பார்த்து வந்த சாயல்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். விசாரணையில், '' கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால் பாலமுருகன் சரியாக வேலை பார்ப்பதில்லை எனக்கூறி தெய்வசிகாமணி அவர்களை வேலையை விட்டு நீக்கியது தெரிய வந்தது.
இதன் காரணமாக பாலமுருகனை போலீசார் அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால், சாயல்குடி தம்பதிகளிடம் நடந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனை அடுத்து நேற்றிரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஐஜி செந்தில் குமார், டி.ஐ. ஜி.கள் சரவணன், சுந்தர், உமா மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் இந்த கொலை வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளை கைது செய்யும் நோக்கில், ஏடிஎஸ்பி பாலமுருகன், டிஎஸ்பிக்கள் ஆறுமுகம், மாயவன், சுரேஷ், சுரேஷ்குமார் கோகுல கிருஷ்ணன் மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள் 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 10 தனிப்படையாக உயர்த்தி ஐஜி செந்தில் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக திருப்பூர் மாநகர், மாவட்டம் மற்றும் ஈரோடு மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் உள்ள விடுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு தங்கி இருந்தவர்களின் முகவரி மொபைல் எண்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.