சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஐபோன் தொழிற்சாலையான பாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களை அனுமதிப்பதில்லை என புகார் எழுந்த நிலையில், விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையை மத்திய அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும்போது பாகுபாடு காட்டக்கூடாது என 1976ஆம் ஆண்டின், ‘சமவேலைக்கு சமஊதியம்’ சட்டத்தின் பிரிவு-5 தெளிவாக தெரிவிக்கிறது. இந்தச் சட்டத்தின் அம்சங்களை அமல்படுத்துதல் மற்றும் நிர்வகித்தலுக்கு உரிய அதிகாரம் கொண்டது மாநில அரசு என்பதால், அதனிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது.
அதேநேரம், உண்மை நிலை அறிக்கையை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துக்கு அளிக்குமாறு பிராந்திய தலைமை தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்திற்கும் கேட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அதிகாரிகள் கூறும்போது, “பாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணியாற்றி வருகின்றனர். பெண்களுக்கு திறன்கள் இருந்தால் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த அறிக்கையை அரசிற்கும் சமர்பித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலச் சட்டங்களின் படி, 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எந்த விதமான பாகுபாடு பார்க்காமல் வேலை வழங்க வேண்டும். மேலும், ஒருவரை பணிக்கு தேர்வு செய்வது என்பது அந்த நிறுவனத்தின் விதிகளுக்கு உட்பட்டதாகும். தமிழ்நாட்டில் அனைவருக்கும் சமமாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், பணியில் சேர்ந்த பின்னர் மகப்பேறு சட்டத்தின்படி விடுமுறையை அளிக்க வேண்டும் எனவும் தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.