கோயம்புத்தூர்: ஒரு பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தங்களது தேவைகளைத் தேடி மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்வது போன்றே, பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவை உயிரிங்களும் இடம்பெயர்கிறது. அதிலும் குறிப்பாக, பறவைகள் இனப்பெருக்கம், காலநிலை மாற்றம் போன்ற காரணங்களுக்காக இடம் பெயருகிறது. சில பறவைகள் கண்டம் விட்டு கண்டம் கடந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், மூன்றாயிரம் கி.மீ தூரத்தை 5 நாட்கள் கடல் மேல் தொடர்ந்து பறந்து சோமாலிய நாட்டை அடைந்த பறவை, பறவைகள் இடம்பெயர்வு, காலநிலை மாற்றம் குறித்து இந்திய வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சோதனையில் முன்னேற்றம் குறித்த ஒரு சிறப்பு தொகுப்பினைக் காணலாம்.
அமுர் ஃபால்கன்:

சீன நாட்டின் வட கிழக்குப் பகுதியில் உள்ள அமுர் ஃபால்கன் (Amur falcon) என்ற பறவை இனம் குறித்து இந்திய வனவிலங்கு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர், 2013-ஆம் ஆண்டு முதல் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். அதாவது, ஆண்டுதோறும் சீனாவிலிருந்து இந்தியா வழியாக ஆப்பிரிக்காவிற்கு பயணிக்கும் இந்த பறவை இனங்கள் அழியும் தறுவாயில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதற்கு முக்கிய காரணம் இடப்பெயர்ச்சி காலங்களில் மணிப்பூர், நாகலாந்து ஆகிய இடங்களில் உணவிற்காக இந்த பறவைகள் அதிக அளவில் வேட்டையாடப்பட்டு வந்தே ஆகும். இந்நிலையில் இந்திய வன விலங்கு ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சியால் அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, தற்போது இந்த பறவைகளை பாதுகாத்து வருகின்றனர்.

தற்போது இந்த பறவை இனத்தைச் சேர்ந்த இரண்டு பறவைகளில் சியுலுவான் -2 என பெயரிடப்பட்ட பறவை தற்போது சீனாவில் இருந்து பயணத்தை துவக்கி சோமாலியாவை அடைந்துள்ளது. இரண்டாவதாக குவாங்ராம் என பெயரிடப்பட்டுள்ள மற்றொரு பருந்து சீனாவில் இருந்து கிளம்பி இந்தியாவில் ஒடிசா, சத்திஸ்கர் இந்திராவதி புலிகள் காப்பகம், மகாராஷ்டிராவில் உள்ள தடோபா புலிகள் காப்பகங்களில் ஓய்வெடுத்த பின்னர், அரபிக் கடல் மீது பறந்து வருகிறது. அந்த பறவையின் நகர்வுகள் சாட்டிலைட் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு பறவைகளும் சில நாட்களில் தெற்கு ஆப்பிரிக்காவை அடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பறவைகள் குறித்த விழிப்புணர்வு:

இதுகுறித்து கோவையை சார்ந்தவரும், இந்திய வனவிலங்கு நிறுவன மூத்த ஆராய்ச்சியாளருமான மருத்துவர் சுரேஷ்குமார் கூறுகையில், "நாகலாந்து, மணிப்பூரில் 2013-ஆம் ஆண்டு இந்த பறவைகள் குறித்த ஆராய்ச்சி துவங்கப்பட்டது. 2012-இல் அதிகமாக நடைபெற்ற வேட்டை காரணமாக, இந்த பறவை இனங்களின் எண்ணிக்கை குறைந்து அழியும் தருவாய்க்கு சென்றது. அதனைத் தடுக்க வனத்துறை மற்றும் இந்திய வன விலங்கு மையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த மக்கள் தற்போது பறவைகளை பாதுகாக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், இந்த பறவை எங்கிருந்து வருகிறது, எங்கு செல்கிறது என்பதை தெரிந்துகொள்ள அதன் உடம்பில் மினி சாட்டிலைட் கருவி பொருத்தி ஆராய்ச்சி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நன்கு வளர்ந்த இரண்டு பறவைகளில் சாட்டிலைட் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு பறவைகளும் தற்போது வலசை துவங்கியுள்ளதால், தெற்கு ஆப்பிரிக்காவை நோக்கிப் பறந்து வருவது சாட்டிலைட் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அமுர் ஃபால்கனின் சிறப்பம்சங்கள்:

சீனாவில் வடகிழக்கு பகுதியில் இருந்து இந்த பறவை வருகிறது. இதன் குழுக்கள் அங்கு தான் உள்ளது. அக்டோபரில் மாதத்தில் சீனாவில் இருந்து இந்தியா வரும், பின்னர் சோமாலியா வழியாக தெற்கு ஆப்பிரிக்காவிற்குச் செல்கிறது. ஆறு நாட்கள் இடைவிடாது கடல் மேல், சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் பறந்து செல்கிறது. இந்த பயணத்தைத் துவக்கும் முன்பு, அதன் உடலமைப்புகளை சரி செய்து கொள்கிறது.
இந்த பறவைகள் பறக்கும் போது உணவு எடுத்துக்கொள்வது இல்லை. அதில் ஒன்று கழுகு இனத்தை சார்ந்தது, மிகவும் சிறியதாக இருக்கும். பூராண் உள்ளிட்ட பூச்சிகளை மட்டுமே உணவாக உட்கொள்கிறது. கடந்த மாதம் இந்த இரண்டு பறவைகளின் உடலில் சாட்டிலைட் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் 24 மணி நேரமும் தகவல்கள் பெறப்பட்டு அதன் நிலையை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
சில பறவைகள் கடலில் விழுந்து இறக்க வாய்ப்பு:

இந்த பறவைகள் நாகலாந்து, மணிப்பூர் பகுதியில் பிடிக்கப்பட்டு சாட்டிலைட் பொருத்தப்பட்டது ஆகும். இந்த பறவைகளின் சிறப்பம்சம், அதிக தூரம் இடம் பெயரும் தன்மை. சீனாவில் இருந்து கிளம்பி இந்தியாவில் சிறிது நாட்கள் தங்கி செல்லும், திரும்பி வரும்போது அதன் வாழ்விடத்திற்கே சென்று விடும். 6,000 கி.மீ இடைவிடாது பறக்கும். 6 நாட்களில் சோமாலியா சென்று விடும். அதில், ஒரு சில பறவைகள் மட்டும் பறக்க முடியாமல் கடலில் விழுந்து இறந்து விடும்.
இதையும் படிங்க: வைகை ஆற்றுக்குள் சிக்கிய அரிய வகை பறவை.. சாதுர்யமாக காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு!
அதற்காக பறக்கும் முன்பு, அதிகளவில் பூச்சிகளை உட்கொண்டு உடலில் பறக்கும் தன்மையை ஏற்படுத்திக்கொள்ளும். அதற்கு சரியான உணவு கிடைக்கவில்லை என்றால், அதனால் பறக்க முடியாது. தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் இந்த பறவைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா? கால நிலையால் எந்த விதமான பாதிப்புகள் ஏற்படும் என்பதை அறிந்துகொள்ளவே இந்த ஆராய்ச்சி, ஒருவேளை அவைகளுக்கு உணவு தட்டுப்பாடு இருந்தால், பறக்க முடியாமல் கடலில் விழும் வாய்ப்புகள் உள்ளது.

தற்போது, இளம் வயது பறவைகள் இந்தியா வந்துள்ளது. இவை கடல் வழியாக பறந்து செல்லும். நாள் ஒன்றுக்கு 1000 கி.மீ பறந்து செல்லும், மணிக்கு 45 கி.மீ வேகத்தில் செல்லும். சீனா, மங்கோலிய, ரஷ்யா ஆகிய நாடுகள் ஒன்று சேரும் இடத்திலிருந்து இவைகள் பயணத்தை துவக்குகிறது. அமுர் பகுதியிலிருந்து வருவதால் அதற்கு அமுர் என பெயரிடப்பட்டுள்ளது.
இதுவரை 2013 முதல் 17 பறவைகளுக்கு சாட்டிலைட் பொருத்திக் கண்காணிக்கப்பட்டுள்ளது. இவை நீண்ட தூரம் பயணிக்கும் என்பதை அப்போதே கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த பறவைகள் ஏப்ரல், மே மாதம் தெற்கு ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பி சீனாவை நோக்கி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றும் தெரிவித்தார்.