விழுப்புரம்: இந்திய ராணுவத்திற்கு 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் வகையில், "அக்னிபாத்" (Agnipath Scheme) என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய அரசாங்கத்தால் ஜூன் 2022 அன்று அங்கீகரிக்கப்பட்டு, பிறகு செப்டம்பரில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், ஆண்டுதோறும் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வீரர்கள் வரை தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதற்கான தேர்வு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும் நிலையில், சமீபத்தில் தமிழ்நாட்டில் இத்திட்டத்தில் சேர 18 வயதிலிருந்து 23 வயதுக்குள் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு 1,600 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடையைத் தாண்டி செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டன.
தற்போது, 'அக்னிவீர் வாயு' தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அக்னிபாத் திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை வீரர்களை தேர்வு செய்வதற்கான 'அக்னிவீர் வாயு' தேர்வு இணையதளம் மூலமாக வரும் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு திருமணமாகாத ஆண்கள், பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்தேர்வுக்கு இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 28ஆம் தேதியே கடைசி நாளாகும்.
தகுதி: வயது வரம்பு, தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து பதினேழரை ஆண்டுகள் முதல் 21 வயது வரை இருக்க வேண்டும். 12ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு அல்லது தொழிற்கல்வி படிப்புகள் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூ.550 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ. 30 ஆயிரம் ஊதியம், நான்கு ஆண்டுகள் பணி முடிவில் பட்டப்படிப்புக்கு இணையான திறன் சான்றிதழும், ரூ.10 லட்சம் வரை அக்னி வீரர் நிதியும் வழங்கப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ளவர்கள் இளைஞர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துப் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 04146 - 227200 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்