ETV Bharat / state

தென்னிந்தியாவில் கழுகுகளின் எண்ணிக்கை 320ஆக அதிகரிப்பு..! - முதுமலைக் காடுகள்

South India Vulture count increased: தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட 2ஆம் கட்ட ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பில், கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

Increased vultures counting
கழுகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 4:15 PM IST

சென்னை: கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற தமிழ்நாடு வனத்துறையின் 2வது ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் கழுகுகள் எண்ணிக்கை சமீபமாக அதிகரித்து வருவதை அறிய முடிகிறது.

மேலும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25 மற்றும் 26ம் தேதிகளில் நடத்தப்பட்ட முதல் ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு மூலம் கழுகுகளின் மொத்த எண்ணிக்கை 246 என மதிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, டிசம்பர் 30 மற்றும் 31ம் தேதிகளில் 2ஆம் முறையாக இரண்டாவது ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.

இந்த கணக்கெடுப்பு முடிவில் 320 ஆக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பந்திபூர் புலிகள் காப்பகம், பில்லிகிரி ரங்கநாதா சுவாமி கோயில் புலிகள் காப்பகம், நாகர் ஹோல் புலிகள் காப்பகம், வயநாடு வன உயிரின சரணாலயம், நல்லை வனப் பகுதி என ஆகிய இடங்களில், கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இதில் 320 கழுகுகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த இடங்களில் வெண்ணிறக் கழுகு, நீண்ட பில்ட் கழுகு, சிவப்பு தலை கழுகு, எகிப்தியன் கழுகு, இமாலயன் கழுகு என 5 வகை கழுகுகள் உள்ளன. இதில் வெண்ணிறக் கழுகுகள் மட்டுமே 139 கழுகுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழுகுகளின் எண்ணிக்கை: முதுமலை புலிகள் காப்பகத்தில், 63 வெண்ணிறக் கழுகுகளும், 9 நீண்ட பில்ட் கழுகுகளும், 6 சிவப்பு தலை கழுகுகளும் உள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், 35 வெண்ணிறக் கழுகுகளும், 25 நீண்ட பில்ட் கழுகுகளும், 10 சிவப்பு தலை கழுகுகளும் உள்ளன. பந்திபூர் புலிகள் காப்பகத்தில், 57 வெண்ணிறக் கழுகுகளும், 3 நீண்ட பில்ட் கழுகுகளும், 5 சிவப்பு தலை கழுகுகளும் உள்ளன. பில்லிகிரி ரங்கநாதா சுவாமி கோயில் புலிகள் காப்பகத்தில், 5 வெண்ணிறக் கழுகுகளும், 7 நீண்ட பில்ட் கழுகுகளும், 2 சிவப்பு தலை கழுகுகளும் உள்ளன.

நாகர்ஹோல் புலிகள் காப்பகத்தில், 26 வெண்ணிறக் கழுகுகளும், 1 நீண்ட பில்ட் கழுகுகளும், 11 சிவப்பு தலை கழுகுகளும் உள்ளன. வயநாடு வன உயிரின சரணாலயத்தில், 31 வெண்ணிறக் கழுகுகளும், 2 நீண்ட பில்ட் கழுகுகளும், 16 சிவப்பு தலை கழுகுகளும், 2 இமாலயன் கழுகுகளும் உள்ளன. நெல்லை வனப்பகுதியில், எகிப்தியன் கழுகு 4 மட்டுமே உள்ளன என கழுகுகள் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.

கழுகுகளின் கூடுகள்: முதுமலை புலிகள் காப்பகம், பந்திப்பூர் புலிகள் காப்பகம், வயநாடு வனப்பகுதி ஆகிய இடங்களில், மொத்தம் 103 கூடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில், 94 வெண்ணிறக் கழுகுகளும், 6 நீண்ட பில்ட் கழுகுகளும், 3 சிவப்பு தலை கழுகுகளின் கூடுகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சுப்ரியா சாகு தெரிவித்ததாவது, "தமிழ்நாடு அரசின் பாதுகாப்பு முயற்சிகளால், தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது எடுத்த கழுகுகளின் கணக்கெடுப்பின்படி, கழுகுகளின் எண்ணிக்கையும் 246இல் இருந்து 320ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் கழுகுகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

ஆனால், தென்னிந்தியாவில் எஞ்சியிருக்கும் கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரித்துப் பாதுகாப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தலைமை வன உயிரினக் காப்பாளர் தலைமையில் மாநில அளவிலான கழுகுகள் பாதுகாப்புக் குழுவை அமைத்துள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: முல்லை பெரியாற்றில் புதிய அணை - கேரள அரசு திட்டவட்டம்! தமிழக அரசின் நடவடிக்கை என்ன?

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.