திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே கூந்தன்குளத்தில் 1994ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அமைக்கப்பட்டு தற்போதுவரை பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளமான பறவைகள் வந்து, மரங்களில் கூடுகட்டி முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.
அவைகள் வளர்ந்த பின்னர், பறக்க கற்றுக் கொடுக்கும் தாய்ப் பறவைகள் மீண்டும் ஆகஸ்டு மாதம் புதிதாகப் பிறந்த பறவைகளையும் அழைத்துக்கொண்டு தங்களது தாயகத்துக்கே குடும்பமாகப் பறந்து செல்லும். கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையில் கூந்தன்குளம் நிரம்பிக் கரை உடைந்ததால் தண்ணீர் வெளியேறியது.
இதன் காரணமாகக் குளத்தில் குறைவான அளவே தண்ணீர் இருந்தது. தொடர்ந்து கூந்தன்குளத்தின் கரையைப் பலப்படுத்தி, மணிமுத்தாறு அணையின் 4வது ரீச்சில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் தண்ணீர் நிரம்பித் ததும்பும் இக்குளத்தில் தற்போது விதவிதமான வெளிநாட்டுப் பறவைகள் பட்டையடுத்து வரத்தொடங்கியுள்ளன.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து அதிகளவில் பறவைகள் இங்கு வந்துள்ளன. அதிலும் குறிப்பாகப் பறவைகளின் நலனை மையமாகக் கருதி இப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் பறவைகளோடு ஒன்றி வாழ்கின்றனர்.
மேலும், இப்பகுதி மக்கள் அவர்களின் வீட்டு முன்பு எத்தனை பறவைகள் வந்தாலும் அவற்றை மக்கள் விரட்டுவதில்லை. இதுமட்டும் அல்லாது, பட்டாசு சத்தம் கேட்டு பறவைகள் அச்சப்படும் என்பதால், தீபாவளி மற்றும் சுபத் துக்க நிகழ்வின்போது இந்தக் கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்கின்றனர். இதன் காரணமாகப் பறவைகளும் எந்தவொரு அச்சமும் இன்றி ஊர்மக்களின் வீட்டின் மேற்கூரைகளிலும் மரங்களிலும் தங்குகிறது.
அந்த வகையில், தற்போது கூழக்கடா, செங்கால் நாரை, கரண்டி வாயன், அரிவாள்மூக்கன், பாம்புத் தாரா, சாம்பல் நாரை, வரித்தலையன் வாத்து, ஊசிவால் வாத்து, நீலச்சிறகி பூ நாரை, செண்டு வாத்து மற்றும் புள்ளிமூக்கு வாத்து போன்ற பறவைகளின் வருகை அதிகமாக உள்ளது.
மேலும், 43 வகையான நீர்ப்பறவைகள் ஆண்டுதோறும் இங்கு வருகை தருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஓராண்டில் அதிக பட்சம் ஒரு லட்சம் பறவைகள் இங்கு வந்துள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பறவைகளைக் காண்பதற்காகத் தற்போது சுற்றுலாப் பயணிகளும் அவ்வப்போது வருகின்றனர்.
இதையும் படிங்கள: ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத பனி: பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டு பயணி பலி!