திருநெல்வேலி: நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்துத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறை ஒன்று தொடங்கி தேர்தல் தொடர்பாக பணப்பட்டுவாடா ஏதாவது நடைபெறுகிறதா? என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
குறிப்பாக சென்னை, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட 44 மாவட்டங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பகுதியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ். முருகன் வீடு மற்றும் அலுவலகத்தில், இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பகுதியை சார்ந்தவர் ஆர்.எஸ்.முருகன். அரசு ஒப்பந்ததாரரான இவருக்கு திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனி பகுதியில் வீடும், பெருமாள்புரம் 80 அடி சாலையில் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வருமான வரித்துறை உதவி ஆணையாளர் ராஜேந்திரன் தலைமையிலான ஏழு பேர் கொண்டு குழுவினர் அவரது வீட்டில் தீவிர சோதனை செய்தனர்.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பெருமாள்புரம் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் திருச்செந்தூர் - திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி இடையேயான சாலை விரிவாக்கம், திருநெல்வேலி - தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் என பல நூறு கோடி ரூபாய்க்கு சாலை பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.
மேலும் இவர் திமுக, அதிமுக என இரண்டு ஆட்சியிலும் பல்வேறு ஒப்பந்தங்களை எடுத்து வேலை செய்து வருகிறார். இதன் காரணமாக, முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவிற்காக பணம் அளிக்க உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முக்கிய அரசியல் கட்சிகள் இவரிடம் பணம் பெற்று கொடுக்க உள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த சோதனையில், ஆர்.எஸ்.முருகன் அலுவலகத்தில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
பணம் கைப்பற்றப்பட்டது குறித்து எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. நேற்றிரவு விடிய விடிய நடந்த சோதனை, தொடர்ந்து 2வது நாளாக நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் படம் பொறித்த கீ செயின், தொப்பி உள்ளிட்டவைகள் பறிமுதல் - Lok Sabha Election 2024