தேனி: நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்.19 தேதி தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்துத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாகத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில் தமிழ்நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில், தேனியில் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள வேப்பம்பட்டி கிராமத்தில் அதிமுக சின்னமனூர் ஒன்றிய கவுன்சிலர், மற்றும் கிளை செயலாளராக உள்ள எஸ்.எஸ்.செல்வராஜ் வீடு மற்றும் தோட்டங்களில் வருமானவரித் துறையினர் தீவிர சோதனை செய்தனர். மேலும், திமுக நிர்வாகி பெத்தனன் என்ற செந்தில் ஆகியோரின் வீடு மற்றும் தோட்டங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.
தேர்தலுக்குப் பணப் பட்டுவாடா செய்யப் பதுக்கி வைத்து இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமானவரித் துறை, தேர்தல் பறக்கும் படை, வருவாய்த் துறையினர், காவல் துறையினர் இணைந்து அதிரடி சோதனை செய்தனர். சோதனை முடிவில் பணம் மற்றும் ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை என வருமானவரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் அமமுக நிர்வாகிகள் தங்கி இருந்த தனியார் தங்கும் விடுதியில் வருமானவரித்துறை சோதனை செய்த நிலையில், தற்போது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.