திருநெல்வேலி: இந்தியா கூட்டணி சார்பில் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுகிறார். எனவே, அவரை ஆதரித்து நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் மற்றும் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் மைதீன் கான் ஆகியோர் தலைமையில் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு, தொடர்ச்சியாக பிரச்சாரப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள ஆவுடையப்பன் அலுவலகத்தில், நேற்று (வியாழக்கிழமை) வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்த வந்தனர்.
அப்போது, சோதனை குறித்து விசாரித்த திமுக நிர்வாகிகளிடன், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாகவும், அந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்த வந்துள்ளதாகவும், அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, இரண்டு மணி நேரமாக ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சிலர், தீவிர சோதனை நடத்தினர்.
இதையடுத்து, தகவல் அறிந்து அங்கு ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்ததால், பாதுகாப்பு கருதி போலீசாரும் குவிக்கப்பட்டனர். சோதனையின் முடிவில், அலுவலகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில், சுமார் 28 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்டதா? என்ற கோணத்தில், அதிகாரிகள் ஆவுடையப்பன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அந்த பணத்திற்கான முறையான ஆவணம் இல்லாததால், அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது. விசாரணையில் அந்த கார் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பூங்கா நகரில் வசிக்கும் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜாஹித் என்பவரது கார் எனத் தெரியவந்துள்ளது. எனவே இன்று (வெள்ளிக்கிழமை) போலீசார் வள்ளியூர் பூங்கா நகரில் உள்ள ஜாஹித் வீட்டில், தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில், நெல்லை திமுக முக்கிய நிர்வாகி அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், நேற்று நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சியாக, இன்று மேலும் பலரது வீடுகளில் சோதனை நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: