சென்னை: சென்னை, பல்லாவரம் ரேடியல் ரோடு பகுதியில், அதிமுக பிரமுகர் லிங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான தனியார் கான்கிரீட் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.2.85 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாளை நடைபெற உள்ளது. இதனால், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் நேற்று இரண்டு இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர். இதன்படி, சென்னை, பல்லாவரம் பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் என்பவர் வீட்டிலும், அவருக்குச் சொந்தமான பள்ளிக்கரணையில் உள்ள கான்கிரீட் நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்தச் சோதனையில், அவரது நிறுவனம் மற்றும் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.2.85 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, சிலர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக வந்த புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, இது யாருடைய பணம், எதற்காக இங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது, தேர்தல் செலவிற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லிங்கராஜ் தொழிலதிபர் என்பது மட்டுமில்லாமல், அவர் அதிமுக பிரமுகராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அவரது நிறுவனம் மற்றும் வீட்டிலிருந்து ரூ.2.85 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள பெண்ணின் வாக்காளர் அட்டை ரத்து.. திருச்சி ஆட்சியர் கூறிய விளக்கம் என்ன? - Lok Sabha Election 2024