நாமக்கல்: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே, தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து வாக்கு எண்ணிக்கை முடிவு வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
இத்தகைய சூழலில், தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆவணமின்றி 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் மற்றும் அதிக எண்ணிக்கையில் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என தேசிய நெடுஞ்சாலை, மாநகரின் முக்கிய பகுதிகள், மாவட்ட எல்லையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுமட்டும் அல்லாது, அரசியல் பிரமுகர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் பணம் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைக்கும் ரகசியத் தகவலின் அடிப்படையிலும் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நாமக்கல் பரமத்தி சாலையில் தனியார்ப் பள்ளி அருகே நிதி நிறுவன அதிபர் ஒருவரின் வீட்டில் தேர்தல் செலவுகள் மற்றும் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்வதற்காகக் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில், பரமத்தி சாலையில் இயங்கி வரும் தனியார்ப் பள்ளிக்குப் பின்புறத்தில் உள்ள சம்மந்தப்பட்ட தனியார் நிதி நிறுவன அதிபரின் வீட்டிற்கு, நாமக்கல் போலீசார் உதவியுடன், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அங்கு விரைந்து சென்று வீடு முழுவதும் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் இதுவரை 5 கட்டப்பைகள் நிறைய 80 லட்சம் ரூபாய் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வீட்டின் உரிமையாளர் பெயர் செல்லப்பன் என்பதும் இவர் பைனான்ஸ் நிறுவனம், எல்பிஜி டேங்கர் லாரிகள் சொந்தமாக வைத்து தொழில் நடத்தி வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையின் முடிவில் தான் முழுவதுமாக எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "பாஜக அரசை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும்" - மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள்!