சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளதன் காரணமாக, தென் தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழை காரணமாக சில நேரங்களில் பலமாகக் காற்று வீசுவதால் கடல் அலையில் சீற்றமும் ஏற்படுகிறது.
தென் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கள்ளக்கடல் உருவாக வாய்ப்பு இருப்பதாக, இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தவகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கள்ளக்கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் கடல் அலை 2.3 மீட்டர் முதல் 2.6 மீட்டர் வரையும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2.7 முதல் 3 மீட்டர் வரையும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் 2.4 முதல் 2.7 மீட்டர் வரை கடல் அலை எழும்பக்கூடும். மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை தொடரும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'கள்ளக்கடல்' என்ற வார்த்தை தமிழகத்திற்கு புதிய வார்த்தையாக இருக்கிறது. ஏனென்றால், இந்த வார்த்தை தெற்கு கேரளா பகுதியில் உருவாகி உள்ளது. கள்ளக்கடல் என்பது எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் திடீரென ராட்சச அலை உருவாகி சேதத்தை ஏற்படுத்தும்.
அதாவது திருடன் எப்படி முன்னறிவிப்பு எதுவுமின்றி வருவானோ, அதே போன்று கள்ளக்கடல் அலைகள் எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென உருவாவதால் தெற்கு கேரளா பகுதியில் இந்த கள்ளக்கடல் என்ற வார்த்தை உருவாகியதாகக் கூறப்படுகிறது. இவை திடீரென உருவாகும் காட்டாற்று வெள்ளத்திற்கு ஒப்பீடாகக் கூறப்படுகிறது.
இது கடலின் நீர்மட்டத்தில் இருந்து 4 மீட்டர் உயரம் வரை சென்று திடீரென சேதத்தை ஏற்படுத்தும். கள்ளக்கடல் உருவாவதை வானிலை ஆய்வு மையம் அறிய முடியாது. ஆனால் கடற்பகுதியில் உருவாகும் குறைந்த அழுத்த நிலையைக் கூர்ந்து கவனித்தால், இரண்டு நாட்களுக்கு முன்னரே கள்ளக்கடல் நிகழ்வுகள் எப்பொழுது உருவாகும் என்பதை அறிவிக்கலாம்.
மேலும், இந்த அலைகள் 8 வினாடிகள் வரை நீடித்து நிற்கும் என கூறப்படுகிறது. இருப்பினும், கள்ளக்கடல் நிகழ்வு உருவாகும் சரியான நேரத்தைக் கூறமுடியாது, மாறாகக் குறிப்பிட்ட நேரத்திற்குள் நடைபெறும் என்பதை கூற முடியும்" என இந்திய கடல்சார் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கான எச்சரிக்கை: இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனக் கூறி, சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கிக் குளிக்க வேண்டாம் எனவும் மற்றும் அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தடையை மீறி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: சூரியப் புயல் குறித்து புகைபடங்களை வெளியிட்ட ஆதித்யா எல் 1 விண்கலம்