ஈரோடு: சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாக்கம்பாளையம், அரிகியம் உள்ளிட்ட வன கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களுக்கு அடர்ந்த வனப்பகுதியில் கரடு முரடான மண் சாலையில் குரும்பூர் பள்ளம் மற்றும் சர்க்கரை பள்ளம் ஆகிய இரண்டு காட்டாறுகளை கடந்து செல்ல வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் குரும்பூர் பள்ளம் மற்றும் சர்க்கரை பள்ளத்தில் மழை நீர் ஓடுவதால் காட்டாறுகளை கடந்து பேருந்து இயக்க முடியாத சூழல் உள்ளது.
இரண்டு காட்டாறுகளின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணி மந்த கதியில் நடைபெற்று வருவதால், மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள கூத்தனூர் அரசு தொடக்கப்பள்ளியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 68 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளிக்கு கடந்த 18ஆம் தேதி செவ்வாய் மற்றும் 19ஆம் தேதி புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ஆசிரியர்கள் வராததால் தினமும் காலை பள்ளிக்கு வரும் மலை கிராம மாணவர்கள் ஆசிரியர்கள் வருவார்கள் என சில மணி நேரம் பள்ளி முன்பு காத்திருந்து, பின்னர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி சென்றனர்.
மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வராததால் மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், பள்ளி இடைநிற்றல் அதிகரிப்பதோடு மலை கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிறுவயதிலேயே ஆடு, மாடு மேய்த்தல் விவசாய வேலைகள் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு குழந்தை தொழிலாளர்களாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆகவே மலை கிராமங்களுக்கு ஆசிரியர்களை நியமித்து பழங்குடியின மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடம்பூர் மலைப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து ஈடிவி பாரத் நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்று காலை சத்தியமங்கலம் வட்டார கல்வி அலுவலர் சரவணன் மாக்கம்பாளையம் மலை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு நேரில் சென்று, வேறு பள்ளிகளில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் மாக்கம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் பொறுப்பாக நியமனம் செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து இரண்டு நாட்கள் திறக்கப்படாமல் இருந்த பள்ளி இன்று காலை திறக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மலை கிராம மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் சென்றனர். ஈடிவி பாரத் செய்து எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா நடவடிக்கை எடுத்து இன்று பள்ளி திறக்கப்பட்டுள்ளதால், மாக்கம்பாளையம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: "கனியாமூர் தனியார் பள்ளியின் மூன்றாவது தளத்தை திறக்கலாம்": சென்னை உயர் நீதிமன்றம்! - kaniyamoor Private School Case