திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் 189 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், 88 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தேடுதல் வேட்டை: திருவாரூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறுகையில், திருவாரூர் மாவட்ட போலீசார் கஞ்சா, குட்கா மற்றும் கள்ளச்சந்தையில் மதுபானத்தை விற்பனை செய்வது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியாக தெரிவித்தார்.
24 மணி நேரத்தில் கைப்பற்றப்பட்டவை: இதில் கடந்த 24 மணி நேரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டு ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இதில் இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததற்காக 9 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைகால் பகுதியில் டாஸ்மாக்கில் சட்ட விரோத மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக 70 பேர் கைது செய்யப்பட்டு 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும், சூதாட்டத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 88 இருச்சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஏழு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்தற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எச்சரிக்கும் காவல்துறை: திருவாரூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா, சட்ட விரோத மது விற்பனை, தடை செய்யப்பட்ட புகையிலை போன்ற பொருட்களை விற்பனை செய்வதை காவல்துறை முற்றிலும் கண்காணித்து வருவதாகவும், மேற்கண்ட குற்றங்களில் எந்த ஒரு நபர் ஈடுபட்டாலும் அவர்களை கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, குண்டர் சட்டத்தில் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என திருவாரூர் காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பெண் காவலருக்கு குறுஞ்செய்தி மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக பாமக நிர்வாகி கைது!