சென்னை: தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும்.
மழை எச்சரிக்கை: இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச.17: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.18: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.19: திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.20,21: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொடர் கனமழை; குளமாக மாறிய குடியிருப்புப் பகுதிகள்.. உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.