சென்னை: சென்னை ஐஐடி உலகிலேயே முதன்முறையாக டிஜிட்டல் கடல்சார் மற்றும் விநியோகச் சங்கிலி பாடத்தில் எம்பிஏ படிப்பை தொடங்கியுள்ளது. உலகளவில் பணிபுரியும் தொழில் வல்லுநர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியின் மேலாண்மைக் கல்வி, கடல்சார் பொறியியல் துறைகளும், தொழில் பங்குதாரரான ஐ மாரிடைம் கன்சல்டன்சியும் இணைந்து இரண்டு ஆண்டிற்கான பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளன. கடல்சார் வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மையில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் அம்சங்களை புகுத்தும் வகையில் உலகளாவிய நிபுணர்களை ஈடுபடுத்துவதே இதன் நோக்கமாகும்.
இளங்கலை பட்டத்தில் குறைந்தது 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இருப்பதுடன், குறைந்தது இரண்டாண்டு கடல்சார்ந்த பணியில் முழுநேர பணி அனுபவம் பெற்றவர்கள் சேரலாம். மாணவர் சேர்க்கை தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.
அதனைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடைபெறும். இப்பாடத் திட்டத்தின் முதல் பேட்சுக்கான விண்ணப்பப்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், இதற்கான வகுப்புகள் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை ஐஐடியின் டிஜிட்டல் கடல்சார் மற்றும் விநியோகச் சங்கிலி பாடத்தில் எம்பிஏ படிப்பை அதன் இயக்குனர் காமகோடி துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது, "நவீன கடல்சார் மற்றும் விநியோகச் சங்கிலித் தொழிலில் ஏற்படும் சிக்கல்களை கையாளும் வல்லுநர்கள் மற்றும் தொழில் முனைவோரின் நிபுணத்துவத்தை மேம்படுத்தும் வகையில், புதுமையான இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்ப செயல்பாடுகளை மேம்படுத்துதல், உத்திசார் வளர்ச்சியை அதிகரித்தல் தொடர்பான விரிவான புரிதலை இதில் பங்கேற்போர் அறியச் செய்வதே எங்களது குறிக்கோளாகும். நெகிழ்வுத் தன்மையுடன் விரிவான கல்வி அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் ஆன்லைன் கற்றலையும், வளாகத்தில் நேரடிப் பயிற்சியையும் தனித்துவம் மிக்க இப்பாடத்திட்டம் வழங்குகிறது.
ஐஓடி, ஏஐ, எம்எல், பிளாக்செயின் போன்ற அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நவீன கடல்சார் சவால்களை சமாளிக்கும் திறன்களைப் பெறவும், தொழில் முன்னேற்றத்தை உந்தச் செய்வதற்கு ஏதுவாக ஐஓடி, ஏஐ, எம் எல் பிளாக்செயின் போன்ற அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் 2 ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படும்.
இக்கல்வி நிறுவன வளாகத்தில் 6 முறை நேரடிப் பயிற்சி வகுப்புகள், கற்றல் ஆதாரங்கள், டிஜிட்டல் கடல்சார் நூலகம் போன்றவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பாடத்திட்டத்தில் 2 ஆண்டுகள் படிப்பதற்கு 9 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேலும், வரும் காலங்களில் கடல்சார் பணிக்கு நல்ல வாய்ப்புகள் இருப்பதால் வேலை வாய்ப்பும் அதிகளவில் இருக்கும். கடற்படையில் இருந்தும் சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம். முதல் ஆண்டில் 100 மாணவர்கள் வரையில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: “நீட் தேர்வில் எவ்வித குளறுபடியும் இல்லை” - பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கருத்து! - BJp MLA Nainar Nagendran