சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் சிறு குறு, நடுத்தர நிறுவனங்களை தொழில் நுட்ப உதவியுடன் வளர்ச்சியடையச் செய்வதற்கான Walmart center for tech excellence மையம் இன்று (பிப்.28) தொடங்கப்பட்டது. இதற்காக சென்னை ஐஐடி மற்றும் வால்மார்ட் நிறுவனம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, “வால்மார்ட் நிறுவனம் மற்றும் சென்னை ஐஐடி இணைந்து புதிய மையத்தை தொடங்கி உள்ளோம். சிறு, குறு, நடுத்தரத் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சியை இந்த மையத்தின் மூலம் வழங்க உள்ளோம்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 30 சதவீதம் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் மூலமாக உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக தொழில் நிறுவனங்களை வளர்ச்சி அடையச் செய்வதுதான் எங்கள் நோக்கம். இதன் மூலமாக, உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு தொழில் வழியில் வழிகாட்டுதல் கிடைக்கும்.
எம்எஸ்எம்இ நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை இந்த மையத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மேலும், சரியான தொழில்நுட்பத்துடன் கொடுக்கும்போது வங்கிகளும் எளிதில் நிதியுதவி வழங்கும். மேலும், சந்தையில் ஒரு பொருளை அளிப்பதற்கு முன்னர், அதன் தரத்தையும் பார்க்க வேண்டியுள்ளது.
பொருளை மக்கள் வாங்கும் வகையில் தயார் செய்யவும், இந்த மையத்தில் பயிற்சி அளிக்கப்படும். விவசாயம், மருத்துவம் ஆகியவற்றை மேம்படுத்த பல தொழில்நுட்பங்கள் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு தொழில்நுட்ப தளத்தை உருவாக்குவது இதுதான் முதல்முறை" எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை வளர்ச்சி அதிகாரி சுரேஷ் குமார் பேசுகையில், “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில் நுட்பங்களை சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவன வளர்ச்சிக்கு பயன்படுத்துவதுதான் 'Walmart center for tech excellence' மையத்தின் நோக்கம்.
அதனை சென்னை ஐஐடியிலும் துவங்கி உள்ளோம். உலக அளவில் வால்மார்ட் நிறுவனத்தினுடைய டெக்னாலஜி சப்போர்ட் சென்னையில்தான் உள்ளது. வால்மார்ட் நிறுவனத்தின் டெக்னாலஜிக்கு தேவையான மையம் சென்னையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தின் நேரடி விற்பனை மையங்கள், தற்போது தமிழகத்திற்கு கொண்டுவரும் திட்டம் இல்லை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வறண்டது வீராணம் ஏரி.. சென்னை மக்களுக்கு குடிநீர் அனுப்பும் பணி நிறுத்தம் - அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?