மதுரை: மதுரையில் உள்ள எஸ்.எஸ்.காலனி பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா அரசு தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறது.
அணை வலுவாக உள்ளதாக என தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்தின் மூலமாக தமிழ்நாட்டுக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. புதிய அணை கட்டவேண்டும் என்று கேரளா மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகள் வந்த போதிலும், கேரள நீர்வளத்துறை அமைச்சரே பொய்யான தகவலை சொல்லுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்த விவகாரத்தில் விவசாயிகள் அச்சமின்றி வாழ்வதற்கு ஏற்ப எந்தவித உத்தரவாதமும் விளக்கமும் தமிழக முதலமைச்சர் தரப்பில் தரவில்லை. மதுரை ஆவினில் பத்தாயிரம் லிட்டர் பால் கெட்டுப் போனநிலையில், விநியோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துணை முதல்வர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பை வேண்டுமென்றே கட்டமைத்து வருகின்றனர். விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டாய் அமைச்சரவை கூட்டத்தைத் தவிர்த்துள்ளார்" என்றார்.
மேலும் "பாஜகவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வரும் அண்ணாமலைக்கு ஆதரவாக, எட்டு முறை தமிழகத்தில் பிரதமர் பிரச்சாரத்திற்காக வந்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டிற்கான வளர்ச்சி நிதியை அண்ணாமலையால் பெற்றுத் தர முடியவில்லை. அதிமுகவின் அரசியல் ஆயுளை நிர்ணயிக்கப் போவதாகத் அண்ணாமலை கருதி கொள்கிறார். கிராமங்கள் தோறும் அதிமுக தனது தொண்டர்களை இணைத்து உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக மக்களின் இதயத்தில் அதிமுக முதல் இடத்தில் உள்ளது.
அண்ணாமலைக்கு ஆலோசனை: சட்டசபைத் தேர்தல் எப்போது வந்தாலும் தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வருவார். அதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. அண்ணாமலை திமுகவை எதிர்த்து அரசியல் செய்தால் பாஜக தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. அதிமுக தொண்டர்களை சோர்வடைய வைப்பது தவறான செயல்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மிகக் குறுகிய கால அரசியல் அனுபவம் கொண்டு விளம்பர அரசியலுக்கு ஆசைப்பட்டு அனைத்து தலைவர்களையும் வம்பிக்கும் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறார். ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார். கருணாநிதியை மக்கள் மறந்து விட்டனர், தற்போது தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதால் கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது அவ்வளவுதான்.
மறைந்த தலைவர்கள் மீது தனிநபர் விமர்சனம் செய்வோரை, தலைவர்கள் அமைதி காத்து ஆமோதித்தால் அது தவறானது. எனவே தாமோ அன்பரசனை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். இதைக் கோரிக்கையாக விடுகிறேன். ஆயிரம் ரூபாய் திட்டத்தை எந்த மாணவன் கேட்டான்? என கேள்வி எழுப்பிய அவர், மடிக்கணினி திட்டத்தை நிறுத்திவிட்டு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். அதே வேளையில் பத்தாயிரம் ரூபாயை புறவாசல் வழியாக பாடநூல் விலை ஏற்றத்தின் மூலம் பெறுகின்றனர்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பத்து ரூபாய் கூல்டிரிங்சில் பல்லி; இருவர் மருத்துவமனையில் அனுமதி.. செய்யாறு சிறுமி பலியை தொடர்ந்து திருப்பத்தூரில் ஷாக்!