மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்த மைதிலி என்பவரின் 14 வயது பையன் கீழமாத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூலை 11ஆம் தேதி காலை 8 மணி அளவில் மாணவன் சென்ற ஆட்டோவை பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல், ஆட்டோ ஓட்டுநரை தாக்கி மாணவனை கடத்திச் சென்றது.
மேலும், ரூ.2 கோடி கொடுத்தால் தான் மகனை விட முடியும் என்று கடத்தல் கும்பல் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாணவனின் தாயார் ராஜலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், எஸ் எஸ் காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்டமாக, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வீரமணி, காளிராஜ் உட்பட நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு மூலக் காரணமாக இருந்த பிற நபர்களை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த சூர்யா இந்த கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக காவல்துறையின் விசாரணையில் தெரிய வருகிறது.
இந்நிலையில் சூர்யா, குஜராத் மாநிலத்தில் பணியாற்றும் தனது கணவரைத் தேடி அங்கு சென்றுள்ளார். மதுரையைச் சேர்ந்த தனிப்படை காவலர்கள் தன்னிடம் விசாரணை மேற்கொள்ள வருகிறார்கள் என அறிந்த சூர்யா தற்கொலை செய்ய முயன்றுள்ளார். பின்னர், கணவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான ரஞ்சித் தன்வரால் மீட்கப்பட்ட சூர்யா, அந்தப் பகுதியில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக சூர்யாவின் தாயார் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "எனது மகள் பேத்தியைப் பார்ப்பதற்காக குஜராத் சென்றதாகவும், தைரியமான பெண் அவர், இவ்வாறு ஏன் செய்தார் என்று தெரியவில்லை என கண்ணீர் மல்க பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “திமுக அரசு பாராமுகமாக உள்ளது.." - மாஞ்சோலை விவகாரத்தில் மீட்புக்குழு குற்றச்சாட்டு! - TN manjolai issue