மதுரை: இயற்கைக்கு மாறாக நாம் செயல்படுவோமேயானால் நீர்நிலைகளைச் சென்றடைய வேண்டிய மழைநீர் குடியிருப்புகளில் பாய்ந்து பேரிழப்பை மட்டுமன்றி, பெரும் பிரச்சனைகளை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டுமென நீரியல் வல்லுநர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் (cyclone fengal) காரணமாக, தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் பேரழிவைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, இந்தப் பகுதிகளில் செல்லும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு சாலைகள் முழுவதுமாக பாதிப்படைந்துள்ளன. இதனால், மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுதில்லியைத் தலையிடமாகக் கொண்டு இயங்கும் பிரதான் என்ற நிறுவனத்தின் திட்டத் தலைவரும், வைகை ஆற்றின் நீர் வளம் குறித்து இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவரும், நீரியல் வல்லுநருமான டாக்டர் சீனிவாசன் இந்த வெள்ளப் பாதிப்பினைத் தவிர்ப்பது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.
அதீத மழைப்பொழிவு காரணமல்ல: நீரியல் வல்லுநர் முனைவர் சீனிவாசன் கூறுகையில், "ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் அதிக மழைப்பொழிவே இதற்குக் காரணம் என அனைவரும் கூறுகின்றனர். அது முழுவதும் உண்மையல்ல. வெள்ளத்திற்கான காரணம் மழை மட்டுமே என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அந்தந்தப் பகுதியிலுள்ள ஆற்றுக்கால்கள், குளக்கால்கள், கால்வாய்கள், ஏரிகள், பாய்ச்சல்கள் கால்வாய்கள் அனைத்தும் ஏதோ ஒருசில காரணங்களால் தூர்வாரப்படாமலோ, ஆக்கிரமிக்கப்பட்டோ, சிதைக்கப்பட்டோ அல்லது அவற்றின் முழுமையான தொடர்ச்சி விடுபட்டோ போயிருப்பதே இந்தப் பெருவெள்ளத்திற்கு முக்கியக் காரணம்.
நீர்நிலைகளை சுருக்குதல்: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நாங்கள் நேரடியாக பார்த்த நீர்நிலை மேம்பாட்டு அனுபவத்திலிருந்து பல்வேறு காரணங்களைப் பட்டியலிட முடியும். இந்த கால்வாய்கள் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். ஒரு ஏரி நிரம்பி அடுத்தடுத்த ஏரிகளுக்கோ நீர்நிலைகளுக்கோ செல்லும் தொடர்ச்சி என்பது மிக முழுமையானதாக, நல்லவிதமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பெய்கின்ற மழைநீர் அனைத்தும் அந்தந்த இடங்களை விட்டு முழுவதுமாக வெளியேறும்.
இதையும் படிங்க: உயிரை காப்பாற்றிக் கொள்ள உடைமைகளை இழந்த கிராம மக்கள்; மழை ஓய்ந்த பின்பும் இருளிலேயே மூழ்கியுள்ள இருவேல்பட்டு!
ஒரு கண்மாயில் அல்லது ஏரியில் பாசனம் நின்றுபோய்விட்டால், அதற்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள், இதர கட்டுமானங்கள் வந்துவிடுகின்றன. அடுத்தபடியாக அந்தக் கண்மாயிலிருந்து அடுத்த கண்மாய்க்குச் செல்லக்கூடிய கால்வாய்கள் சுருக்கப்பட்டு விடுகின்றன அல்லது முற்றிலுமாக தூர்க்கப்பட்டு விடுகின்றன. இதன் காரணமாக மழைநீர் ஒரு ஏரியிலிருந்து மற்றொரு ஏரிக்குச் செல்லும் வழி முற்றிலுமாக தடைபட்டு விடுகிறது. இதன் காரணமாக தண்ணீர் பிறகு பகுதிகளுக்குப் பரவி முழுவதுமாக வெள்ளம் வந்ததைப் போன்ற சூழல் ஏற்பட்டு வருகிறது.
பராமரிப்பின்மை: இந்த ஆண்டு அரகண்டநல்லூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளமானது முற்றிலும் ஏரிகள் மற்றும் கால்வாய்களின் பராமரிப்பின்மையால் நிகழ்ந்ததுதான். அதேபோன்று ஊத்தங்கரை பகுதியிலும் ஏற்பட்ட வெள்ளத்திற்கு ஆற்றுக்கால்களில் குடியிருப்புகள், கட்டுமானங்கள் உருவானது அல்லது அதன் அளவைச் சுருக்கியதே காரணம். வருகின்ற தண்ணீரை ஏற்கும் திறனை இந்த நீர்நிலைகள் இழந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது நாங்கள் பணிபுரியும் தென்மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன.
நெடுஞ்சாலை ஆணையத்தின் தவறு: அடுத்ததாக, தற்போது இந்திய அரசு நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த நெடுஞ்சாலைகள் அனைத்தும் முன்பு போல் அன்றி, தற்போது ஏற்றமான இடத்தில்தான் அமைக்கப்படுகின்றன. அந்தந்தப் பகுதிகளில் வழிந்து செல்லக்கூடிய கால்வாய்களின் குறுக்கேதான் இந்த நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன.
குறிப்பாக, தெற்கிலிருந்து வடக்காக செல்லக்கூடிய ஒரு சாலை, கிழக்கிலிருந்து மேற்காகச் செல்லக்கூடிய பலவிதமான கால்வாய்களை ஊடறுத்துக் கொண்டு உருவாக்கப்படுகிறது. அவ்வாறு அமைக்கப்படும்போது சிறிய கால்வாய்கள், ஓடைகளை ஒழுங்குபடுத்தி அவற்றின் வழித்தடங்களுக்கு பாதிப்பு நேராதவாறு அமைப்பது குறித்த முனைப்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இருப்பதாகத் தெரியவில்லை. நாங்கள் மேற்கொண்ட ஆய்வின்படி பல்வேறு சாலைகளில் சிறிய கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அடைக்கப்பட்டுவிட்டன.
இவற்றுக்கெல்லாம் சில இடங்களில் மாற்று ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். ஆனால், முன்னர் அந்நீர்நிலைகள் தண்ணீரைக் கொண்டு சென்ற திறனுக்கும், தற்போது அமைக்கப்பட்ட முறையின் மூலமாக உள்ள திறனுக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாக நாங்கள் அறிகிறோம். பல கால்வாய்கள் தொடர்புகளற்று துண்டிப்புக்கோ அல்லது மடைமாற்றத்திற்கோ ஆளாகியுள்ளன. இதனால் சாலையின் ஒருபுறம் தேங்கும் நீர், அதிகரித்துக் கொண்டே ஒரு கட்டத்திற்குப் பிறகு சாலையை அரித்துவிட்டு மறுபக்கம் பாயத் தொடங்குகிறது. இதுபோன்ற பாதிப்பை தென்மாவட்டங்களில் நாங்கள் பார்த்து வருகிறோம்.
பொறியில் சிக்கிய எலி: ஆகையால், தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்புகள், சிறிய கால்வாய்களுக்கும் உரிய அளவிலான பாலங்கள், தண்ணீர் கடந்து செல்வதற்கான வழிமுறைகளைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், நாம் அனைவரும் பொறியில் சிக்கிய எலிபோலவே வாழ நேரிடும். குறுகிய நேரத்தில் அதிகமான மழைப்பொழிவு நேரும் இந்த சூழலில், பல சிறிய கால்வாய்களின் இருப்புதான் வெள்ள இடர்ப்பாட்டைத் தவிர்க்கும்.
விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சராசரியாக சுமார் 3 ஆயிரம் கி.மீ நீளத்திற்கு ஏரிகளை இணைக்கக்கூடிய கால்வாய்கள் உள்ளன. இவை சுமார் 3 மீட்டர் அகலத்திலிருந்து 30 மீட்டர் அகலத்தில் சிறிதும் பெரிதுமாக அமைந்துள்ளன. இதுபோன்ற கால்வாய்களை சரியாக பராமரிக்கும் பட்சத்தில் எவ்வளவு பெரு மழை பெய்தாலும் இவை தாங்கிக் கொண்டு வெள்ளநீரைக் கடத்திச் சென்று பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும். இதற்கு மாறாக நாம் செயல்படுவோமேயானால் நீர்நிலைகளைச் சென்றடைய வேண்டிய மழைநீர் குடியிருப்புப் பகுதிகளிலோ சாலைகளிலோ பாய்ந்து பேரிழப்பை மட்டுமன்றி, பெரும் பிரச்சனைகளை உருவாக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.