நீலகிரி: இயற்கை எழில் மிகுந்த உதகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், விழாவில் ஒரு பகுதியாக மூன்று நாட்கள் நடைபெறும் நாய்கள் கண்காட்சி உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் கடந்த 10ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) துவங்கியது.
தென்னிந்திய கெனல் கிளப் சார்பில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்த நாய்கள் கண்காட்சியின், 135வது நாய்கள் கண்காட்சிக்கான முன்பதிவு, கடந்த மார்ச் 7ஆம் தேதி துவங்கி, இம்மாதம் 2ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில், தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 56 நாய் வகைகளுள் 450க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.
இதில் நாட்டு ரக நாய்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை உள்ளிட்டவையும், ஜெர்மன் ஷெப்பர்ட், டாபர்மேன், சைபீரியன் அஸ்கி, பீகல், பெல்ஜியம் ஷெப்பர்ட், டச்ஷண்ட் உள்ளிட்ட அயல் நாட்டு ரக நாய்கள் பங்கேற்றன. நாய்களுக்கான போட்டியில், நாய்களின் அணிவகுப்பு, அவற்றின் தனித் திறமைகளை வெளிப்படும் போட்டிகள், நாய்களின் சுயக் கட்டுப்பாடு போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் வெற்றி பெறும் நாய்களின் உரிமையாளர்களுக்குக் கேடயங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற நாய்க்கு இந்த ஆண்டின் சிறந்த நாய் விருதும் வழங்கப்பட்டது. இந்த கண்காட்சி காண உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்துச் சென்றனர்.
இதையும் படிங்க: 'இன்னைக்கு ஒரு புடி'.. திண்டுக்கல்லில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா!