திருநெல்வேலி: சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பேச்சியம்மாளை திருமணம் செய்துள்ளார். பேச்சியம்மாள் பிரசவத்திற்காக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையைப் பார்க்க மாரிமுத்து, அவரது சகோதரருடன் சென்ற போது, இரு குடும்பத்தினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணைக்காக வந்த சகோதரர்களான சென்னையைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் பேச்சிமுத்து குமார் ஆகிய இருவரையும், காவல் நிலைய ஆய்வாளர் தில்லை நாகராஜன், தலைமைக் காவலர்கள் சண்முகநாதன் பிரேம்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாநகர துணை ஆணையரிடம் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் புகார் மனு அளித்ததாக தெரிகிறது. அவர்களும் நடவடிக்கை எடுக்காததாக, பாதிக்கப்பட்ட சகோதரர்கள் மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், காவல்துறையால் பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவல்களிடம் இருந்து தலா 25 ஆயிரம் வீதம் அவர்களது ஊதியத்தில் பிடித்தம் செய்து கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "சிறைக்கைதியின் உயிருக்கு சிறைக் காவலர்களே பொறுப்பு" - மாநில மனித உரிமைகள் ஆணையம்! - Human Rights Commission