தேனி : தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அதே பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜேந்திரன், மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
சில நாட்களில் ராஜேந்திரன் சிறையில் உயிரிழந்த நிலையில், தனது கணவரின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவரது இறப்புக்கு காரணமான சிறைத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மனைவி பவுன்தாய் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையும் படிங்க : 50 ஆண்டுகள் கழித்து மலர்ந்த நினைவுகள்.. சென்னை புதுக் கல்லூரியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!
இந்த வழக்கை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன், மனுதாரர் கணவரின் பிரேத பரிசோதனை அறிக்கையும், சிறை மருத்துவரின் மருத்துவ அறிக்கையும் முரண்பாடாக உள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை சந்தேகப்படும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கையை ஏற்க மறுத்த ஆணையம், மருத்துவ அலுவலர்களின் அஜாக்கிரதையான செயல்பாடு மருத்துவத்துறை மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி உள்ளதாக கூறி, உயிரிழந்தவரின் மனைவிக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.