சென்னை: சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு பெருமளவு போதைப்பொருள் கடத்தப்பட்ட இருப்பதாக, சென்னை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் சென்னை பேருந்து நிலையங்கள், விமான நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்க்கு இடமாக வந்த ஒருவரை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டபோது, அந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பைசல் ரகுமான் என்பது தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்து சுமார் 6 கிலோ மெத்தபெட்டமைன் என்கிற போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதனை அடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த மன்சூர், இப்ராஹிம் என்ற இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, அவர்களுக்கு சொந்தமான குடோனில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 92 கிராம் பெத்தபெட்டமைன் என்கிற போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனை சேர்த்து மொத்தம் 6.92 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் சர்வதேச மதிப்பு 70 கோடி ரூபாய் இருக்கும் என மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அதிகாரிகள் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மூவரும் இணைந்து இந்த போதை பொருட்களை ராமநாதபுரம் மாவட்டம் வழியாக இலங்கைக்கு கடத்த வந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இவர்கள் பின்னணியில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நகை கடை உரிமையாளர் மகன்கள் கடத்தல் வழக்கு; திருவண்ணாமலையில் 5 பேர் கைது..!