சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளான (BVSc & AH, BTech) படிப்பில் சேர்வதற்கு நாளை (ஜூன் 3) முதல் 21ஆம் தேதி வரை https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் 80 இடங்களும், தேனி வீரபாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும், என மொத்தம் 660 இடங்கள் உள்ளன.
உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பி.டெக்) கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பிடெக்) 40 இடங்களும், கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக்கல்லூரியில் பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 20 இடங்களும் உள்ளன.
இந்த படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக, கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் சேர்வதற்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு.. தமிழகத்தில் எங்கு? எவ்வளவு அதிகரிப்பு? - Toll Gate Price Increase