சென்னை: இளங்கலை பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு இன்று முதல் ஜூன் 6 தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் எனவும், சான்றிதழ்களை ஜூன் 12ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.
மேலும், மாணவர்களுக்கான கலந்தாய்வு அகில இந்திய தொழில்நுட்பக் கழகக்தின் கல்விசார் அட்டவணைக்கு ஏற்ப அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மாணவர்கள் விண்ணப்பங்களை www tneaonline.org www.dte.gov.in எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பக்கட்டணமாக OC, BC, BCM, MBC DNC பிரிவினருக்கு 500 பதிவு கட்டணமாகவும் எஸ்சி, எஸ்டி, எஸ்டிஏ பிரிவினருக்கு 250 ரூபாய் பதிவு கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்தவற்கு உதவிடும் வகையில் 110 இடங்களில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்றும் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் மாணவர்கள் 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு சந்தேகங்களை அறிந்துக் கொள்ளலாம். மாணவர்கள் விண்ணப்பிக்கும் முன்பு செய்யவேண்டியவைகளை குறித்து https://youtu.be/qtH0p0Gp98c என்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளதுடன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சென்ற வருடம் (2023-24) கலந்தாய்வில் 474 கல்லூரிகளில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 196 இடங்களுக்கு அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி வழங்கியது. அதில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 887 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 2022-23ம் கல்வியாண்டைவிட 12.05 சதவீதம் அதிகமாகும்.
அரசுப் பள்ளியில் 6 முதல் 12 ம் வகுப்பு வரையில் படித்த மாணவர்களுக்கான மொத்த இடங்கள் 12,136 ஆகும். அதில் 9960 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 2022ம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை விட 11.80 சதவீதம் அதிகமாகும் எனவும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்குழுவின் தலைவரும், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.