சென்னை: ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடவுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கேற்ப, வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 31) அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி முடிவடைந்தது. இதில், ஒட்டுமொத்தமாக 1,749 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதில், அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், வேட்பு மனு மீதான பரிசீலனையின்போது 653 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 1,058 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.
தற்போது தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 1,085 வேட்பு மனுக்களில் 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதனையடுத்து, இறுதியாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 874 ஆண் வேட்பாளர்களும், 76 பெண் வேட்பாளர்களும் என மொத்தம் 950 வேட்பாளர்கள் என பட்டியலை இறுதி செய்து தேர்தல் ஆணையம் முன்னதாக வெளியிட்டது.
இந்நிலையில், அந்தந்த தொகுதியில் போட்டியிட உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கேற்ப வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், கரூர் தொகுதியில் அதிகபட்சமாக ஒரு வாக்குச்சாவடியில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 9 தொகுதிகளில் குறைந்தபட்சமாக ஒரு வாக்குச்சாவடியில் 1 வாக்குப்பதிவு இயந்திரமும் பயண்படுத்தப்பட உள்ளது.
வடசென்னை, தென்சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட 5 தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். அதேபோல் மத்திய சென்னை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 24 தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
குறைந்தபட்சமாக 9 வேட்பாளர்கள் கொண்ட நாகை உள்ளிட்ட 9 தொகுதிகளில் ஒரே ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மொத்தம் 16 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறும். நோட்டாவை ஒரு வேட்பாளராக எடுத்துக் கொண்டால், 15 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் தொகுதிகளில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டும்.
31 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் தொகுதிகளில் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டும். அதன்படி, அதிகபட்சமாக 54 வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர் தொகுதியில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.