திருப்பூர்: 18வது மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று (மார்ச் 28) நடந்து முடிவடைந்தது. திருப்பூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜ் முன்னிலையில், வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன், அதிமுக வேட்பாளர் அருணாச்சலம், பாஜக வேட்பாளர் முருகானந்தம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 38 பேர் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், இன்றைய பரிசீலனையில் 22 நிராகரிக்கப்பட்டு, 16 மனுக்கள் ஏற்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே.சுப்பராயன், அதிமுகவில் அருணாச்சலம், பாஜகவில் ஏ.பி.முருகானந்தம், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீதாலட்சுமி, பகுஜன் சமாஜ் கட்சியின் பழனி, சுயேச்சைகளான கண்ணன், செங்குட்டுவன், சுரேஷ், வேலுச்சாமி, கார்த்திகேயன், சுப்பிரமணி மற்றும் சதிஷ்குமார் மனுக்கள் ஏற்கப்பட்டன.
அதேபோல், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியைச் சேர்ந்த சந்திரசேகர், ராஷ்டிரிய சமாஜ்பக்ஷா கட்சியைச் சேர்ந்த மலர்விழி, தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியின் ஜனார்த்தனன் என 16 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுக்களை (மார்ச் 30) மதியம் 3 மணி வரை திரும்பப் பெறலாம். இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஏற்கனவே 16 வேட்பாளர்கள் இருப்பதாலும், ஒரு நோட்டா உள்ளிட்டவையுடன் 17 சின்னங்கள் மட்டுமே இடம்பெற உள்ளது.
இதனால் திருப்பூர் தொகுதி வாக்குப்பதிவில் ஒரு இயந்திரம் மட்டுமே பயன்படுத்துவது உறுதியாகி உள்ளது. வேட்பு மனு நிராகரிக்கப்பட்டவர்கள் 7 பேர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எதற்காக வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். பூர்த்தி செய்ததில் தவறு மற்றும் பூர்த்தி செய்யாமல் இருந்தது, தேதி குறிப்பிடாமல் இருந்தது உள்ளிட்ட காரணங்களால் மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: டெல்லியின் முதலமைச்சர் சுனிதா கெஜ்ரிவால்? அரசியல் களத்தில் இறங்குகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? - Sunita Kejriwal