சென்னை: 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வர இருக்கும் நிலையில் திமுக தரப்பில் போட்டியிட விரும்புபவர்கள் அதற்கான விருப்ப மனுக்களை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் சமர்ப்பித்து வந்தனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில், திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான படிவங்கள் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஏற்கனவே திமுக சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, ஆ.ராசா உள்ளிட்ட பலர் நேரடியாக வந்து மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை வழங்கினர். மேலும், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் நேரு, தர்மபுரி மாவட்டச் செயலாளர் பழனியப்பன் ஆகியோரும் விருப்ப மனு அளித்துள்ளனர்.
அந்த வகையில், இன்று (மார்ச்.07) ஏராளமானோர் விருப்ப மனுக்களை அளித்தனர். அதில், அமைச்சர் துரைமுருகன் மகனும், தற்போதைய, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் மீண்டும் வேலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுவைச் சமர்ப்பித்திருந்தனர். இதே போலச் சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவு திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தார்.
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் அமைச்சர் காந்தியின் மகனும் திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளருமான வினோத் காந்தி போட்டியிட விருப்பம் தெரிவித்து வர்த்தக அணி சார்பில் விருப்ப மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விருப்பமனு சமர்ப்பிக்கும் கடைசி நாளான இன்று (மார்ச்.07) மட்டும் 335 விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய விருப்பமனு தாக்கல் இன்று 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 2,984 விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதிமுக பம்பரம் சின்னம் தொடர்பான வழக்கு; தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!