சென்னை: ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் பொன்.பாண்டியனை பணியிடை நீக்கம் செய்து 2019ஆம் ஆண்டு பதிவுத்துறை துணைத்தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து பொன்.பாண்டியன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தாலும், நீண்டகாலத்துக்கு பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க முடியாது எனவும், எந்த வேலையும் வாங்காமல் 75 சதவீத ஜீவன படி வழங்குவதால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுவதாக கூறி, பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பணி நியமனம் வழங்க உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, பதிவுத்துறை தலைவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, துறை ரீதியான விசாரணையை, தமிழக அரசின் அரசாணைப்படி ஓராண்டுக்குள் முடிக்காமல், ஐந்து ஆண்டுகளாக பொன் பாண்டியனை பணியிடை நீக்கத்தில் வைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், ஐந்து ஆண்டுகளாக எந்த வேலையும் வாங்காமல், எதிர்மனுதாரருக்கு 75 சதவீத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது எனவும், குறித்த காலத்தில் விசாரணையை முடிக்காத அதிகாரியிடம் இருந்து வசூலிக்க வேண்டும். அரசு உத்தரவையும் அமல்படுத்துவதில்லை. நீதிமன்ற உத்தரவையும் செயல்படுத்துவதில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.
எனவே, ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை குறித்த காலத்துக்குள் முடிக்காமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை என இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாளை தீர்ப்பு! - Ministers disproportionate case