சென்னை: மத்திய அரசின் என்ஐஆர்எஃப் (NIRF) 2024 தரவரிசையின்படி, ஐஐடி சென்னை, ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து 6-வது ஆண்டாகவும், பொறியியல் பிரிவில் தொடர்ந்து 9வது ஆண்டாகவும் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனை குறித்து இன்று (ஆகஸ்ட் 13) பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஐஐடி இயக்குனர் காமகோடி கூறியதாவது, “ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் தங்களது பொறுப்பை சிறப்பாகச் செய்துள்ளதால் இந்திய அளவில் மீண்டும் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அரசின் என்ஐஆர்எஃப் (NIRF) 2024 தரவரிசையின்படி, ஐஐடி சென்னை, ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து 6வது ஆண்டாகவும், பொறியியல் பிரிவில் தொடர்ந்து 9 வது ஆண்டாகவும் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. மத்திய அரசின் என்ஐஆர்எஃப் (NIRF) பட்டியலில் சென்னை ஐஐடி மீண்டும் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.
நமது நாட்டின் 15-35 வயதுள்ள மக்களில் 75 சதவிகிதம் பேர் கிராமப் பகுதிகளில் வசிக்கிறார்கள். கிராமப்புற பகுதிகளுக்கும் முறையான, தரமான கல்வி போய் சேர வேண்டும் என்பது எங்களது முக்கிய நோக்கம். அதற்காக பி.எஸ் டேட்டா சயின்ஸ், பி.எஸ். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ், தமிழ்நாடு அரசுடன் சேர்ந்து ‘எலக்ட்ரானிக்ஸ் கிட்’ வைத்து மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது போன்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். நாட்டில் எந்த ஐஐடிக்களும் இல்லாத வகையில் விளையாட்டு பிரிவு மாணவர்கள் 5 பேருக்கு சீட் வழங்கியுள்ளோம்.
தமிழ்நாடு அரசுடன் இணைந்து பல கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். அதன் விளைவாக, 5,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். பல ஆராய்ச்சி மையங்கள், புத்தொழில் நிறுவனங்களை தொடங்கியுள்ளோம். அக்னிகுல் ராக்கெட் எங்களின் மிகப்பெரிய வெற்றி. ஒவ்வொரு மாதமும் ஒரு பில்லியன் ஈட்டும் நிறுவனம் ஒன்றை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். முதலிடம் பெறுவது எங்களுக்கு எளிதாக இருந்தது. அதை தக்கவைப்பது தான் சவாலான பணி. அதனை தொடர்ந்து செய்வோம்.
மாநில பல்கலைக்கழகத்திற்காக தனி பட்டியல் வேண்டும் என கடந்த ஆண்டு கல்வி அமைச்சகத்திடம் தெரிவித்தோம். அதன்படி, இந்தாண்டு அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதே சாலையில் தேசிய அளவில் இரண்டு கல்வி நிறுவனங்கள் இருப்பது எங்களுக்கு பெருமை. ஐஐடி 15 ஆயிரம் ராஜாக்கள் இருக்கின்றனர். அதில் ஒரு சேவகனாக இயக்குனர் நான் செயல்படுகிறேன். தலைமைக்கு தேவை அடக்கம். சந்திக்க வருபவர்களை புன்சிரிப்புடன் வரவேற்க வேண்டும்.
பி.எஸ்.சி கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ் மூலம் ஆன்லைன் முறையில் பாடப்பிரிவை அறிமுகப்படுத்த உள்ளோம். மாணவர்களுக்கு கவுன்சிலிங், அறிமுக நிகழ்ச்சி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். தேசிய தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து நிறைய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு தேசிய அளவில் தர வரிசைப் பட்டியல் உள்ளது போல், உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் தரவரிசை பட்டியல் வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் அங்குள்ள கல்வி நிறுவனங்களின் தரம் தெரியும். தொடர்ந்து தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் அடுத்தாண்டும் முதலிடம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி ஈடிவி பாரத்திடம் கூறியதாவது, “தேசிய அளவில் முன்னணி கல்வி நிறுவனமாக இடம்பெறுவதால், எங்களின் பல்வேறு தரவுகள் பிற நிறுவனங்கள் பார்த்து பயன்பெற முடியும். அதே நேரத்தில், நாங்களும் அவர்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டியுள்ளது. தரவரிசைப் பட்டியலில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி உதவித் தொகையையும் ஒரு அலகாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கம் அதிகரிக்கும்.
சென்னை ஐஐடி, என்ஐடியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். அதில் சிறப்பாக படிக்கும் 10 சதவீதம் மாணவர்கள் இறுதி ஆண்டில் சென்னை ஐஐடியில் ஓராண்டு படிக்க முடியும். சென்னை ஐஐடியால் வழங்கப்படும் பாடத்திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக பி.எஸ் எலக்ட்ரானிக்ஸ், பி.எஸ் டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவுகளைக் கொண்டு வந்துள்ளோம். மேலும், ஸ்வயம் (SWAYAM) பிளாட்பார்ம் இணையதளத்தில் சென்னை ஐஐடி பேராசிரியர்கள் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை பாடத்திட்டத்துடன் பதிவேற்றம் செய்துள்ளனர்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: தேசிய தரவரிசையில் சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம்; இயக்குநர் வி.காமகோடி பெருமிதம்! - IIT ranking in NIRF