சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் குற்ற சம்பவங்களை தடுக்கவும், தலைமறைவாக உள்ள ஏ பிளஸ் மற்றும் ஏ பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய சென்னை மாநகர காவல் ஆணையாளர் காவல் துறைக்கு உத்தரவிட்டார். அதன் பேரில், சென்னை ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு காவல் துறையினர், அனைத்து பகுதி காவல் நிலைய காவல் துறையினர் அடங்கிய தனிப்படை அமைத்து சென்னை மற்றும் வெளியூரில் பதுங்கி இருந்த பல்வேறு குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பல ஆண்டுகளாக சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஏ பிளஸ் ரவுடியான சரவணன் என்கிற பாம் சரவணன் தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிலையில், அவரை கைது செய்ய புளியந்தோப்பு துணை ஆணையாளர் தலைமையில் தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.
இந்த நிலையில், பாம் சரவணன் சென்னை வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், புளியந்தோப்பு குற்றப்பிரிவு ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் முல்லை நகர் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நாட்டு வெடிகுண்டு
இந்த சூழலில், கடந்த 15 ஆம் தேதி இரவு பாம் சரவணன் வியாசர்பாடி முல்லை நகர் ரயில்வே யார்டு பகுதியில் பதுங்கி இருந்ததை உறுதி செய்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்தனர். போலீசாரை பார்த்த உடன் அங்கு இருந்து தப்பி ஓட முயன்ற பாம் சரவணனை கைதாகும்படி போலீசார் எச்சரித்தனர்.
ஆனால், அதற்குள் தன் கையில் இருந்த பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீசாரை தாக்க முயன்றார். இதில் உதவி ஆய்வாளர் மணி என்பவருக்கு வெட்டுகாயம் ஏற்பட்டது. மேலும், பாம் சரவணன் அங்கிருந்து தப்பி செல்வதற்காக பையில் இருந்த நாட்டு வெடிகுண்டை போலீசார் மீது வீசியுள்ளார். தற்காப்புக்காக போலீசார் அருகில் இருந்த புதரில் பதுங்கியதில் நாட்டு வெடிகுண்டு முட்புதரில் பட்டு வெடிக்காமல் இருந்துள்ளது.
இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் 2 இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய நபர் கைது!
உடனடியாக சுதாரித்த காவல் ஆய்வாளர் அம்பேத்கர் துப்பாக்கியை காண்பித்து பாம் சரவணனை கைதாகும் படி எச்சரித்துள்ளார். ஆனால், ஆய்வாளர் மீது மற்றொரு நாட்டு வெடிகுண்டை வீச எடுத்த நிலையில் தற்காப்புக்காக பாம் சரவணன் காலில் போலீசார் சுட்டனர். இதில் காயமடைந்த அவரை மடக்கி பிடித்த போலீசார் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கும், பாம் சரவணன் வெட்டியதில் காயமடைந்த உதவி ஆய்வாளர் மணியை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திடுக்கிடும் தகவல்
இந்நிலையில் பாம் சரவணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் வாக்குமூலமாக அளித்துள்ளார். விசாரணையில், கைது செய்யப்பட்ட பாம் சரவணன் கடந்த 2015 ஆம் ஆண்டு வெங்கல் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி வடசென்னை மாவட்ட செயலாளர் தென்னு என்கிற தென்னரசு என்பவரின் உடன் பிறந்த தம்பி ஆவார். இவர் மீது சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் 6 கொலை வழக்குகளும், 6 கொலை முயற்சி வழக்குகளும், வெடிகுண்டு வீசியது, ஆயுதம் பயன்படுத்தியது என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், பாம் சரவணன் புளியந்தோப்பு சரகத்தில் ஏ பிளஸ் ரவுடி லிஸ்டில் இடம்பெற்றுள்ளார்.
கொலை செய்து எரிப்பு
மேலும், அண்ணனை கொலை செய்தவர்களை பழி தீர்க்க பல்வேறு ஊர்களுக்கு சென்று தலைமறைவாக இருந்து வந்துள்ளார் பாம் சரவணன். கடந்த 2018 ஆம் ஆண்டு தன் அண்ணன் தென்னரசு கொலை வழக்கில் தொடர்புடைய கோயம்பேட்டை சேர்ந்த பன்னீர்செல்வம் என்கிற யானை செல்வத்தை ரியல் எஸ்டேட் முன் விரோதத்தில் வில்லிவாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் கடத்தி கொலை செய்ததாகவும், அதனை அறிந்த பாம் சரவணன் யானை செல்வத்தை காரில் ஆந்திர மாநிலம் கூடூர் பகுதிக்கு கடத்தி சென்று அங்குள்ள ஆற்றங்கரையில் அவரை கொலை செய்து எரித்துவிட்டதாகவும், பின்னர் 2019 ஆம் ஆண்டு கேகே நகர் காவல் காவல் நிலையத்தில் ஒரு வழக்கில் சரண்டைந்து அங்கிருந்து வெளியே வந்து மற்ற எதிரிகளை கொலை செய்ய தலைமறைவாக இருந்ததாகவும், வியாசர்பாடி பகுதியில் தான் பதுங்கி இருந்தபோது போலீசார் தன்னை பிடித்ததாகவும் தன்னுடைய வாக்குமூலத்தில் அவர் தெரிவித்தார். மேலும் ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோயம்பேட்டில் யானை செல்வம் காணாமல் புகார் பெறப்பட்டு வழக்குபதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அதனை கொலை வழக்காக மாற்றிய போலீசார் அவருடைய கொலைக்கு பயன்படுத்திய 4 நாட்டு வெடிகுண்டுகள், 5 கிலோ கஞ்சா போதை பொருள், ஒரு வீச்சு அரிவாள், ஒரு சிறிய கத்தி மற்றும் செல்போன்களை பாம் சரவணனிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். மேலும், எம்கேபி நகர் காவல் நிலையத்தில் பாம் சரவணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.