தேனி மக்களவைத் தொகுதியில் கடந்த 1996-98 ஆம் ஆண்டு திமுக வென்ற நிலையில் தற்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு தேனி தொகுதியை திமுக கைப்பற்றி உள்ளது.
சென்னை: கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்று தேனி தொகுதியில் மட்டும் தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்த முறை தேனி தொகுதியையும் சேர்த்து 39 தொகுதியிலும் வெல்ல வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுகவினருக்கு உத்தரவிட்டிருந்தார். இதனால் கடந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தேனி தொகுதியை இந்த முறை திமுக நேரடியாக போட்டியிட்டது.
முக்கிய தொகுதி: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக வெற்றி பெற்ற தொகுதியான தேனி அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்பட்டது. மேலும், தேனி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதனால் தேனி தொகுதி திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடையே கூடுதல் முக்கியத்துவம் பெற்றது.
தேனி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் பொறுப்பு அமைச்சராக ஐ.பெரியசாமி நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் உடல்நிலை காரணமாக பிரச்சாரம் செய்யவில்லை. அவருக்கு பதிலாக மதுரையை சேர்ந்த அமைச்சர் மூர்த்தி, தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ராஜினாமா செய்வேன்: அப்போது மதுரையில் திமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, ''திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெற வைக்காவிட்டால் மறுநாளே எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்'' என ஆவேசமாக பேசினார். அது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தேனி தொகுதியின் மீது திமுகவினருக்கு இருந்த முக்கியத்துவமும் தெரிந்தது.
மேலும், தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து பேசியபோது, ''தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெற வைத்து விட்டால் தேனி தொகுதியில் தங்கி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்'' என கூறியிருந்தார். அத்துடன், தமிழகத்திலேயே தேனி தொகுதியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என பிரச்சாரத்தில் பேசியிருந்தது திமுகவினரிடையே கவனம் பெற்றது.
அனல் பறந்த பிரச்சாரம்: இதேபோல, தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திருச்சி சிவா, சுப. வீரபாண்டியன், திண்டுக்கல் ஐ லியோனி, வாகை சந்திரசேகர், என பெரும் அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்தனர். இதன் எதிரொலியாகவே தேர்தல் முடிவுகள் திமுகவிற்கு சாதகமாக மாறியது.
தேனி மக்களவைத் தொகுதியில் மொத்தம் உள்ள 16,22,949 வாக்குகளில் 11,33,513 வாக்குகள் பதிவாகி இருந்தது. அதேபோல் 9,571 தபால் வாக்குகள் பதிவாகி அதில் 1,940 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில், தேனி மக்களவைத் தொகுதியில் மின்னணு வாக்குகள் எண்ணிக்கையில் முதல் சுற்றில் தொடக்கத்திலிருந்து திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் வகித்து வந்தார். இரண்டாம் இடத்தில் டிடிவி தினகரனும், மூன்றாம் இடத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியும் பின்னடைவை சந்தித்தனர். முதல் சுற்றில் இருந்து 23 வது சுற்று வரை திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.
உறுதியான வெற்றி: 17ஆவது சுற்று முடிவில் முன்னிலையில் இருந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கும், இரண்டாம் இடத்தில் இருந்த டிடிவி தினகரனுக்கும் இருந்த வாக்கு வித்தியாசத்தை விட குறைவான வாக்குகளே மீதம் எண்ண பட வேண்டும் என்ற நிலையில் தங்க தமிழ்ச்செல்வனின் வெற்றி 17 வது சுற்றில் உறுதி செய்யப்பட்டது, இதனால் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து முகவர்களை தவிர அதிமுகவினர் மற்றும் அமமுகவினர் புறப்பட்டு சென்றனர்.
பின்னர் தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆர்.வி ஷஜீவனா வெற்றிச் சான்றிதழை வழங்கினார்.
தொகுதிவாரியாக திமுக, அதிமுக, அமமுக பெற்ற வாக்குகள்:
சோழவந்தான் தொகுதி
சோழவந்தான் தொகுதியில் உள்ள 18 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வன் 86,966 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 31,404 வாக்குகளும், பாஜக கூட்டணி வேட்பாளர் டிடிவி தினகரன் 28,189 வாக்குகளும் பெற்றனர்.
உசிலம்பட்டி தொகுதி
உசிலம்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 1,09,005 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 24,941வாக்குகளும், பாஜக கூட்டணி வேட்பாளர் டிடிவி தினகரன் 39,930 வாக்குகளும் பெற்றனர்.
ஆண்டிப்பட்டி தொகுதி
ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 90,059 வாக்குகளும், டிடிவி தினகரன் 54,617 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 31,711 வாக்குகளும் பெற்றனர்.
பெரியகுளம் தொகுதி
பெரியகுளம் தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் 91,733 வாக்குகளும், டிடிவி தினகரன் 58,241 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 22,199 வாக்குகள் பெற்றனர்.
போடிநாயக்கனூர் தொகுதி
போடிநாயக்கனூர் தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் 93,053 வாக்குகளும், டிடிவி தினகரன் 57,267 வாக்குகளும், நாராயணசாமி 23,780 வாக்குகளை பெற்றனர்.
கம்பம் தொகுதி
கம்பம் தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் 98,294 வாக்குகளையும், டிடிவி தினகரன் 51,665 வாக்குகளையும், நாராயணசாமி 20,836 வாக்குகளையும் பெற்றார். தபால் வாக்குகளில் திமுகவிற்கு 2383 வாக்குகளும், டிடிவி தினகரன் 2759 வாக்குகளும், அதிமுக வேட்பாளருக்கு 716 வாக்குகளும் கிடைத்தது.
தேனி மக்களவைத் தொகுதியில் ஒட்டுமொத்தமாக திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 5,71,493 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட டிடிவி தினகரனை விட 2,78,825 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
பாஜக கூட்டணி வேட்பாளர் டிடிவி தினகரன் 2,92,668 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 1,55,587 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டனர்.
இதன் மூலம் தேனி மக்களவைத் தொகுதியில் கடந்த 1996-98 ஆம் ஆண்டு திமுக வென்ற நிலையில் தற்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு தேனி தொகுதியை திமுக கைப்பற்றி உள்ளது.
முதலமைச்சர் முக ஸ்டாலின் போட்ட உத்தரவு, அமைச்சர் மூர்த்தி விட்ட சவால், உதயநிதி ஸ்டாலின் பேச்சு என தேனி தொகுதியை கைப்பற்ற வேண்டும் என தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுகவினருக்கு கடந்த முறை கோட்டை விட்ட தேனி தொகுதியை இம்முறை வென்று 40க்கு 40 வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தருமபுரி மக்களவை தொகுதி: வாக்கு வங்கியை தக்க வைத்த பாமக! - கோட்டையை திமுகவிடம் பறிகொடுத்த அதிமுக!