ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற நுழைவில் நேற்று (நவ.20) வழக்கறிஞர் கண்ணன் என்பவரை ஆனந்தன் என்பவர் அரிவாளால் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சம்பவம் குறித்து விசாரித்த அவரும் போலீசார் கண்ணனை வெட்டிய ஆனந்த் மற்றும் அவரது மனைவியும், வழக்கறிஞருமான சத்யவானியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கண்ணன் மீதான கொலை முயற்சிக்கு வழக்கறிஞர் சத்யவானியும் உடந்தை என போலீசார் விசாரித்ததில் தெரிய வந்துள்ளது.
வெட்டுப்பட்ட வழக்கறிஞர் கண்ணன் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது ஓசூர் நீதிமன்றம் முன்பாக ஓசூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், வழக்கறிஞர் மீதான கொடூர தாக்குதலை கண்டித்தும், பிற மாநிலங்களில் உள்ள வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்தக்கோரியும், நீதிமன்ற வளாகங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கக்கோரியும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஓசூர் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் பகீர் திருப்பம்... ஆனந்தின் மனைவியும் கைது..!
இதுக்குறித்து வழக்கறிஞர்கள், நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொடூர சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.. இதனால் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணிக்கிறோம். பிற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். வழக்கறிஞரை வெட்டிய நபருக்கு ஆதரவாக ஜாமீன் பெற எந்த வழக்கறிஞரும் முன்வர கூடாது என்பதை வழக்கறிஞர்களை கேட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
நேற்று வழக்கறிஞர் நீதிமன்ற நுழைவில் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ஓசூர் நீதிமன்ற வளாகத்திற்கு வரும் நபர்கள் போலீசாரின் சோதனையின் பின்பே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி கூடுதல் எஸ்பி சங்கர் தலைமையில் 50க்கும் மேற்ப்பட்ட போலீசார் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்