மதுரை: மதுரையில் ஆன்மீக அடையாளமாகத் திகழும் 'சித்திரை திருவிழா' சுட்டெரிக்கும் கடும் வெயிலிலும் களைக்கட்டத் துவங்கியிருக்கிறது. சித்திரை மாதம் வந்து விட்டால் போதும் மதுரைக்காரர்கள் முகத்தில் திருவிழாக்களைப் பொங்கிப் பெருகும்.
ஒருபுறம் மீனாட்சி கோயில் திருவிழாக்கள் என்றால் மற்றொருபுறம் அழகர் மலையில் இருந்து புறப்பட்டு வரும் கள்ளழகரின் வைகை ஆற்று எழுந்தருளல் என மதுரையின் ஒவ்வொரு வீடும் விழாக்கோலம் பூண்டு காணப்படும். இதற்கிடையே மதுரை மாநகரின் மையப் பகுதியான மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி அழகர் திருவிழாவிற்கு தேவையான சல்லடம், கள்ளழகர் வேடம் பூணும் நபர்களுக்கான அலங்கார பொருட்கள் விற்பனை மும்மரமாக நடைபெறும், இதனால் நாள்தோறும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
அதன் ஒரு பகுதியாகத்தான் கீழமாசி வீதி அருகே தோப்பறை விற்பனையும் சூடு பிடிக்கும். அது என்ன தோப்பறை? கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின் போது கள்ளழகர் வேடம் அணிந்து வரும் பக்தர்கள் தண்ணீர் பீச்சி அடிப்பது வழக்கம். அப்படி தண்ணீர் பீச்சி அடிக்கக்கூடிய ஆட்டுத்தோலால் ஆன பைதான் தோப்பறை என்று அழைக்கப்படுகிறது.
இந்த தொழிலை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக செய்து வருகின்றனர். இதில் பெரிய லாபம் ஒன்றும் இல்லை என்றால் கூட எங்களின் முன்னோர்கள் செய்த இந்த ஆன்மீக சேவையை நாங்களும் மேற்கொண்டு வருகிறோம் என்கிறார்கள் காரியாபட்டியை சேர்ந்த வியாபாரிகள்.
வியாபாரி வெள்ளைச்சாமி: இது குறித்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த தோப்பறை வியாபாரி வெள்ளைச்சாமி கூறுகையில்,"ஆட்டுத்தோலால் ஆன இந்த பையை பல தலைமுறைகளாக எங்கள் மக்கள் தான் மதுரைக்கு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். எங்களின் முன்னோர்கள் செய்த இந்த ஆன்மீக சேவையை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
தோப்பறை தயார் செய்வது எப்படி? ஆட்டுத்தோல்களை வாங்கி தண்ணீரில் சுண்ணாம்புக்கல் சேர்த்து ஊற வைக்கிறோம். பிறகு அதில் உள்ள ரோமங்களை எல்லாம் நீக்கிவிட்டு, நான்கு நாள் ஊற வைத்த பிறகு, மீண்டும் தண்ணீரில் அலசி கத்தியை வைத்து சுரண்டி அதன் பிறகு ஆவாரம்பூ செடியை கொண்டு வந்து தண்ணீரில் தோலோடு ஊற வைக்கிறோம்.
அதன் பிறகு கருவப்பட்டை, கடுக்காய் ஆகியவற்றையும் சேர்த்து தண்ணீரோடு ஊற வைக்க வேண்டும். காய வைத்த பிறகு மீண்டும் தண்ணீரில் நினைக்க வேண்டும். காலால் தேய்த்து அயன் செய்த மாதிரி விறைப்பாக்க வேண்டும். மேற்கண்ட நடைமுறைகளை செய்த பிறகு தான் ஆட்டு தோல் தற்போதைய பயன்பாட்டிற்கு ஏற்றார் போல் உருவாக்க முடியும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பாரம்பரியமாய் இந்த தொழில் எங்களுக்கு தெரிந்திருப்பதால் ஆட்டின் வலது கால் துளையில்தான் தண்ணீர் பீய்ச்சும் அமைப்பை உருவாக்க முடியும். பிறருக்கு இது குறித்து எதுவும் தெரியாது. ஆனால் நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதலாக இந்த தொழிலுக்கு தேவையான எந்த ஒரு உதவியையும் அரசாங்கம் செய்யவில்லை.
தோப்பறை செய்வதற்கு தண்ணீர் தேவைப்படுகிறது ஆனால் எங்கள் ஊரில் போதுமான தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் திண்டுக்கல்லில் உள்ள பேகம்பூர் சென்று அங்குள்ள தோல் தொழிற்சாலைகளிடம் இதனை செம்மை செய்து கொண்டு வருகிறோம்.
அதன் பிறகு அங்கிருந்து மதுரைக்கு கொண்டு வரும்போது அதனை தைத்துக் கொடுப்பதற்கான கூலி என செலவுகள் மிக அதிகம். தோலின் அளவு தன்மையைப் பொறுத்து அதன் விலை ரூபாய் 300 இல் இருந்து ரூ.600 வரை ஆகும். சில தோல்கள் சிறியதாக இருக்கும் அவற்றால் எங்களுக்கு எந்தவித லாபமும் இருக்காது.
ஆனால் அதற்காக வீணாக்காமல் வருகின்ற விலைக்கு விற்பனை செய்து விடுவோம். காரணம் இந்த தொழிலை நாங்கள் வருமானம் கருதி செய்யவில்லை. அழகு மலையானுக்கு நாங்கள் ஆற்றுகின்ற ஆன்மீக கடமையாகவே இதுவரை கருதி வருகிறோம். திருவிழாவுக்குத் தேவையான மாலையோ, சந்தனமோ, மற்ற சில பொருட்களோ வேறு எங்கும் வாங்கிவிட முடியும் ஆனால் இந்த தோப்பறை மதுரையில் மட்டும் தான் கிடைக்கும்"என்றார்.
வியாபாரி தங்க முருகன்: "இந்த தொழில் காரணமாக எங்களுக்கு மட்டுமின்றி மதுரைக்கும் பெருமைதான். பல தலைமுறைகளாக நாங்கள் இந்த தொழிலை மேற்கொண்டு வருகிறோம். சித்திரை திருவிழா கடுமையான வெப்ப காலத்தில் நடைபெறுகின்ற காரணத்தால் மக்களை குளிர்விப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு தான் தண்ணீர் பீய்ச்சி அடித்தல் எனும் சடங்கு. தமிழக அரசு எங்கள் கிராமத்தில் தண்ணீர் வசதியோடு தொட்டிகள் அமைத்துக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்" என்றார் வியாபாரி தங்க முருகன்.
சொர்ண லட்சுமி (காரியாபட்டி): தோப்பறை தயார் செய்வதற்கு தண்ணீர் தேவைபடுகிறது ஆனால் எங்களுக்கு போதுமான தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் திண்டுக்கல்லில் உள்ள பேகம்பூர் சென்று அங்குள்ள தோல் தொழிற்சாலைகளிடம் ஆட்டுத்தோலில் உள்ள ரோமங்களை நீக்கிவிட்டு வருகிறோம். இதில் எங்களுக்கு பெரிதாக வருமானமும் இல்லை என்ற போதும் பாரம்பரியமாக செய்து வருகின்ற காரணத்தால் பக்தர்களின் மனம் கோணாமல் விற்பனை செய்கிறோம்" என்றார்.
இது குறித்து அலங்காநல்லூரைச் சேர்ந்த கள்ளழகரின் பக்தர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,"என் குடும்பத்தில் ஐந்தாவது தலைமுறையாக தண்ணீர் பீச்சும் நேர்த்திக்கடனை செய்து வருகிறோம். கள்ளழகரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மஞ்சள் நீரால் நாங்கள் தண்ணீர் பீய்ச்சுகிறோம்.
இவை எதுவும் விளையாட்டுக்காக அல்ல. மக்களுக்கு நோய் நொடிகள் வராமல் இருப்பதற்காக இந்த மஞ்சள் நீரை நாங்கள் புனித நீராக பீய்ச்சி வருகிறோம். சாதி சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் கள்ளழகர் திருவிழா மதுரையில் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது" என்கிறார்.
நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?: மதுரையில் கோலாகலமாக நடைபெறும் கள்ளழகர் திருவிழாவிற்காக ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்தே தோப்பறை தயார் செய்யும் பணியில் இறங்கிவிடுகிறார்கள் காரியாபட்டி சேர்ந்த கிராம மக்கள்.
இதனை விற்பனை செய்வதற்காக ஒரு வாரத்திற்கு முன்பே தங்களது குழந்தைகள் குடும்பங்களோடு மதுரை கீழமாசி வீதி தேரடி பகுதியில் கூடி விடுகிறார்கள். திருவிழா முடிந்ததும் இதற்கான தொழில் தொடர்ந்து இல்லை என்பதால் கூலி வேலைக்கு செல்கிறார்கள்.
காரியாபட்டியில் உள்ள 300 குடும்பங்களுக்கு இந்த ஆட்டுத் தோல் தான் வருமான ஆதாரம். இங்குள்ள பல வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளதே காரியாபட்டி கிராமத்தில் தோப்பறை தாயார் செய்வதற்காகத் தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும் என்பதுதான். தலைமுறை தலைமுறையாக தோப்பறை தயார் செய்து வரும் காரியாபட்டி கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றத் தமிழக அரசு முன்வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஐசியுவில் மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை!