சென்னை: ஒரு நகரத்தின் மொழியிலிருந்து அதனுடைய வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவர்களுடைய வழக்கு மொழிகளை வைத்து அவர்களின் வரலாற்றை நாம் நன்கு உணர முடியும். குறிப்பாக, தமிழகத்தில் கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பேசப்படும் வழக்கு மொழியானது அவர்களின் வட்டார மொழியாக இருக்கிறது. அதிலிருந்து அவர்களை அறிய முடிகிறது.
அதேபோல, சென்னையின் மொழி என்பது பல மொழிகளின் வார்த்தைகள் கலந்த கலவையாக உள்ளது. குறிப்பாக தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், டச்சு, போர்ச்சுகீசியம், உருது, தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளின் கலவையாக சென்னை மொழி இருக்கிறது.
போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோர் வணிகம் புரிவதற்காக சென்னை நோக்கி வந்தனர். அண்டை நாட்டவர்கள் வியாபாரம் செய்வதற்காக வந்ததால், அவர்களின் உதவிக்காக மொழிபெயர்ப்பாளர்களும் சென்னைக்கு அதிகமாக வரத் தொடங்கியிருந்தனர்.
குறிப்பாக, தெலுங்கு நாடு மற்றும் தமிழ்நாட்டின் மொழிபெயர்ப்பாளர்கள் அதிகமாக சென்னைக்கு வந்திருந்தனர். அப்பொழுதுதான் மொழியில் கலப்பு அதிகமாக ஆரம்பிக்கத் தொடங்கியது. பிற நாட்டவர்கள் அவர்களின் மொழியில் வியாபாரம் செய்ய பேசும் போது மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளூர் வியாபாரிகளிடம் அவர்களுக்குப் புரியும் படியும், பிற நாட்டினருக்கு புரியும் படியும் மொழியை கலந்து பேசத் தொடங்கினர். மேலும், அவர்கள் எழுதும் கடிதங்களிலும் அதே போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தி எழுதி வந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில், சென்னை மொழி எப்படி உருவாகியது என வரலாறு ஆய்வாளர் ஸ்ரீராம் கூறுகையில், "கிழக்கு இந்திய கம்பெனியைச் சார்ந்தவர்கள் வியாபாரத்திற்காக வந்த பொழுது பணப் பற்றாக்குறை அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, இங்கு வியாபாரம் செய்ய வேண்டிய சூழலில் வெளி ஆட்களிடம் இருந்து பணம் கடனாக பெற்று பொருட்களை வாங்கினர். அதில் குறிப்பாக, சாஹூ பிரிவு மக்களிடம் இருந்து தான் அதிகப்படியான பணத்தை கடனாகப் பெற்று வியாபாரம் செய்து வந்துள்ளனர்.
சாஹூ பிரிவு மக்களும் பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளதால் சென்னையில் குடியேறத் தொடங்கினர். அவர்கள் குறிப்பாக மின்ட் தெரு, சௌகார்பேட் போன்ற பகுதிகளில் அதிகமாக குடியேறி வாழ்ந்தார்கள். சாஹூக்காரர்களின் பேட்டை என்பதுதான், நாளடைவில் மருவி சௌக்கார்பேட்டையாக மாறியது. சாஹூ மக்களின் மொழியுடன் தமிழ் மொழியும் அதிகம் கலக்கத் தொடங்கியது.
பிறகு நவாப்கள் சென்னை நோக்கி வரத் தொடங்கினர். அவர்கள் பெரும்பாலும் உருது மொழி பேசுபவர்களாக இருந்ததால், உருது மொழியும் சென்னை மொழியோடு கலக்கத் தொடங்கியது. உதாரணமாக, 'கலபை' என்ற வார்த்தை சென்னையில் அதிகமாக பயன்படுத்துவார்கள் 'கலவை' என்பதை தான் 'கலபை' என வழக்கு மொழியில் பயன்படுத்தினர். 'கலபை' என்பது கலவை என்ற உருது மொழியிலிருந்து வந்துள்ளது.
மேலும், வெகுஜன மக்கள் தங்கள் குழந்தைகளை செல்லமாக 'நைனா' என்ற வார்த்தை அதிக அளவில் பயன்படுத்தி வருவதை பார்த்திருப்போம். தெலுங்கில் அப்பாவை 'நானா' என அழைப்பார்கள் இந்த வார்த்தை பெருமளவில் சென்னையில் தான் கேட்க முடியும். அதேபோல், பிரச்னையாக இருக்கிறது என்பதை 'பேஜாரா கீதுபா' என பேசுவார்கள். 'பேஜார்' என்பது உருது மொழியிலிருந்து உருவாகியுள்ளது.
'ஷோக்கா கீரபா' என்ற வார்த்தையை தினம்தோறும் சென்னையில் கேட்கக்கூடும். இந்த வார்த்தை 'ஷௌக்கன்' என்ற வார்த்தையிலிருந்து பிறந்துள்ளது, 'ஷௌக்கன்' என்றால் உயர்தரப்பட்ட மனிதராக கருதப்படுபவர் என்ற அர்த்தமாகும். இவ்வாறாக பல மொழிகளிலிருந்து சென்னைக்கென்று தனி மொழி வளர்ந்து வந்துள்ளது" என்று விவரித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: சென்னையின் அடையாளம் எழும்பூர்.. எக்மோராக உருமாறியது எப்படி? - மெட்ராஸ் டே சிறப்பு தொகுப்பு