வேலூர்: வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் புதிய நீதிக்கட்சியின் சார்பில் கட்சியின் வேலூர் பாராளுமன்ற தொகுதியின் பட்டதாரிகள் அணியின் கூட்டம் அதன் தலைவர் இந்திரநாத் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கலந்துகொண்டு பேசினார். இவ்விழாவில் கட்சியின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் பேசுகையில், "மக்களைத் தேடி மருத்துவர்கள் என்ற திட்டம் மூலம் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவம் அளித்துள்ளோம். இதோ போல் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும் வகையில் பல பகுதிகளில் முகாம்களை நடத்தினோம்.
இதன் மூலம் ஆறாயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஒரு அரசாங்கம் கூட ஒரு நாளில் இவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது கடினம், ஆனால், அதை நாங்கள் செய்து கொடுத்து இருக்கிறோம். எங்களுடைய இலக்கு, 25 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் அதற்காக மேலும், பல முகாம்களை நடத்தவுள்ளோம்.
மற்ற மதத்திற்குக் கொடுக்கும் அங்கீகாரம் இந்து மதத்திற்குக் கிடைக்கவில்லை என்று வருத்தம் அளிக்கிறது. மேலும், ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஜனவரி 22) நடக்கவிருக்கிறது. நேற்று, கூட காஞ்சிபுரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நாளை ஒலிபரப்பாக உள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்துள்ள ராம ஜென்ம பூமியின் நேரடி ஒளிபரப்பிற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்குப் பல மாநில அரசுகள் விடுமுறை அளித்துள்ளது ஆனால் தமிழக அரசு விடுமுறையை அளிக்கவில்லை ஒரு சார்பாகத் தமிழக அரசு செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், அதற்கான அவகாசம் தற்போது இல்லாததால் பாராளுமன்ற தேர்தல் பின்னர் தான் நடத்த வேண்டிய நிலை உள்ளது.
அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை வரும் 1ஆம் தேதி வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அண்ணாமலை வரவேற்கும் விதமாக புதிய நீதிக் கட்சியின் சார்பில் குடியாத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜகதான் இந்துக்களின் எதிரி என்பதை அம்பலப்படுத்துவோம் - திமுக இளைஞரணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்!