மதுரை: மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காகக் கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.
தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்காக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. மதுரைக்குப் பின்பு அறிவிக்கப்பட்ட, பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானங்கள் முடிந்துவிட்டது. மதுரையில், 36 மாதங்களில் மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடையும் எனக் கூறப்பட்டது.
ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. எனவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை நீதிமன்றம் நிர்ணயித்த கால அளவைக்குள் கட்டி முடிக்க வேண்டும். கட்டுமான பணியில் உண்மையை மறைத்துப் பொய் அறிக்கையை வெளியிடும் அரசு அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்குச் சிறப்புத் தீர்மானம் கொண்டு வர உத்தரவிட வேண்டும்" என தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப் பணிகளைக் குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்து நிறைவு செய்ய வேண்டும். மத்திய அரசு தனி தீர்மானம் நிறைவேற்றி நிதி ஒதுக்கீடு செய்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என வாதிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப் பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீடு பணிகள் நிறைவடைந்து விட்டது. 2026-ல் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். மேலும், முழு விவரங்களை அடுத்த வாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் மனுதாரர் சம்பந்தம் இல்லாத அதிகாரிகளை எதிர் மனுதாரராகச் சேர்த்துள்ளதாகவும்" தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து நீதிபதிகள், எதற்காகப் பிரதமர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரின் முதன்மைச் செயலாளர்களை எதிர் மனுதாரராக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார் என கேள்வி எழுப்பினார். மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து மத்திய நிதித்துறை செயலாளர், மத்தியச் சுகாதாரத்துறை செயலாளர், இந்திய மருத்துவக் கழக இயக்குநர் மற்றும் மாநில சுகாதாரத்துறைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: "கலெக்டர் ஆபிஸ் புதுசு ஆனால் எந்த வசதியும் இல்லை" - குமுறும் மாயிலாடுதுறை மக்கள்!