மதுரை: சாலையோரத்தில் அடிபட்டு கிடக்கும் விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என உலகனேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண்சுவாமிநாதன் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “நம் நாட்டில் விலங்குகள் உரிய மதிப்புடனும், எந்தவித துன்பமும் இன்றி வாழ உரிமை உண்டு. அரசியலமைப்புச் சட்டம் 51 ஏ (ஜி)இன் கீழ் ஒவ்வொரு குடிமகனும், பிற உயிரினங்களுக்காக இரக்கம் காட்ட வேண்டியது அவசியம். எனவே, பிசிஏ சட்டத்தின் பிரிவு 3, 11(1)(ஏ), (எம்) மற்றும் பிரிவு 22ன்படி விலங்குகளைப் பாதுகாக்கும் கடமை குடிமக்களுக்கு உள்ளது.
விலங்குகளைப் பாதுகாக்கவும், சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுவதைத் தடுக்கவும் ஒரு தனி அமைப்பை உருவாக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்பேரில் இதுவரை எந்த ஒரு குழுவையும் தமிழக அரசு அமைக்கவில்லை.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் முழு நேர கால்நடை மருத்துவர் மற்றும் இதர பணியாளர்களைக் கொண்டு மருத்துவமனைகள் மற்றும் விலங்குகள் காப்பகங்களை அமைப்பது மற்றும் அத்தகைய மருத்துவமனைகள் மற்றும் விலங்குகள் காப்பகங்களை திறம்பட நடத்துவதற்கும், பராமரிப்பதனையும் கால்நடை பாதுகாப்பு விதிகள் வலியுறுத்துகின்றன.
இந்த நிலையில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலை விபத்தில் சிக்கிய பசு படுகாயம் அடைந்து கால்கள் பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்திலேயே பசு வேதனையுடன் கிடந்துள்ளது. இந்த தகவல் வழக்கறிஞர் வாட்ஸ்அப் குழுவின் மூலம் எனக்கு தெரியவந்தது. உடனடியாக அந்த பசுவை மீட்டு சிகிச்சை அளிக்க முயன்றேன். ஆனால், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பசுவை மீட்டு சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வழக்கறிஞர் மீது கொடூர தாக்குதல்.. ஓசூர் வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்ற பணிகளை புறக்கணிக்க முடிவு!
இந்த மனு இன்று (நவ.21) நீதிபதிகள் ரமேஷ் மற்றும் மரியா கிளாட் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அருண் ராமநாத் ஆஜராகி, “இந்த மாடு இரண்டு நாட்களாக நீதிமன்ற நுழைவாயில் முன் உரிய சிகிச்சை இல்லாமல் உயிருக்கு போராடி வருகிறது. இது குறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அனைத்து மாவட்டங்களிலும் இதுபோல் உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் மாடு மற்றும் மற்ற விலங்குகளை பாதுகாக்க குழு அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு இதுவரை நிறைவேற்றப்படவில்லை” என தெரிவித்தார். இதனையடுத்து, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ புகார் பெறப்பட்டு உடனடியாக மாடுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு மாடு ஒத்தக்கடை ஊராட்சி நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது” என தெரிவித்தனர்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், “கடந்த 2008 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனைத்து விலங்கினங்களையும் பாதுகாக்கும் பொருட்டு, மாவட்டந்தோறும் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நிலை என்ன? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்”என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட மாடு வழக்கறிஞர்கள் குழு சென்று பார்க்க முயன்ற போது மாடு இறந்து அடக்கம் செய்யப்பட்டதாக ஊராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்